பாயாசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை கொள்ளை


பாயாசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை கொள்ளை
x
தினத்தந்தி 21 Dec 2021 10:17 PM GMT (Updated: 21 Dec 2021 10:17 PM GMT)

ராயபுரத்தில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்த பாயாசத்தை கொடுத்து நகை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர்,

சென்னை ராயபுரம் பீ.வி.கோவில் தெருவைச் சேர்ந்தவர் கனகவள்ளி (வயது 85). வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 7-ந்தேதி மூதாட்டி கனகவள்ளி, வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவர் அணிந்து இருந்த 5 பவுன் நகை கொள்ளைபோய் இருந்தது.

இதுபற்றி ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சப்-இன்ஸ்பெக்டர் காதர் தலைமையிலான தனிப்படை போலீசார், கனகவள்ளி வீட்டருகே உள்ள 40-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

பாயாசத்தில் மயக்க மருந்து

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பத்மாவதி (53) என்ற பெண், மூதாட்டி கனகவள்ளிக்கு மயக்க மருந்து கலந்த பாயாசத்தை கொடுத்து நகை கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. பத்மாவதியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில், கடந்த 3-ந் தேதி கனகவள்ளி, ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு வந்த பத்மாவதியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பாசமாக பேசி பழகிய பத்மாவதியை மூதாட்டி கனகவள்ளி தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று உபசரித்தார். அப்போது கனகவள்ளி தனியாக வசிப்பதை அறிந்து கொண்ட பத்மாவதி அவரிடம் கொள்ளையடிக்க திட்டமிட்டார்.

திருமணநாள்

அதன்படி 7-ந்தேதி மீண்டும் மூதாட்டி கனகவள்ளி வீட்டுக்கு சென்ற பத்மாவதி, தனக்கு திருமணநாள் என்று கூறி கனகவள்ளியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். பின்னர் மயக்க மருந்து கலந்த பாயாசத்தை கொடுத்தார். அதை வாங்கி குடித்த மூதாட்டி கனகவள்ளி மயங்கினார்.

உடனே அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி, வளையல் என 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டார். அவரது வீட்டின் அருகில் வசித்து வரும் பேத்தி சியாமளா வந்து பார்த்தபோது மூதாட்டி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை மயக்கம் தெளியவைத்து கேட்டபோது நடந்த விவரங்களை கூறினார். அதன்பிறகே போலீசில் புகார் செய்யப்பட்டு பத்மாவதி கைது செய்யப்பட்டு உள்ளார்.

நகைகள் அடகு

பத்மாவதி ஏற்கனவே இதேபோல் கொருக்குப்பேட்டையில் கைவரிசை காட்டி உள்ளார். பத்மாவதியின் கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் தனது நகைகள் அனைத்தையும் அடகு வைத்துவிட்டார். அந்த நகையை திருப்ப பணம் தேவைப்பட்டதால் இதுபோல் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து நகை கொள்ளையில் ஈடுபட்டதாக போலீசாரிடம் பத்மாவதி கூறினார்.

பெண்ணை கைது செய்து மூதாட்டியின் நகைகளை மீட்டு கொடுத்த தனிப்படையினரை துணை கமிஷனர் சிவபிரசாத் பாராட்டினார்.

Next Story