ஒரே பெயரில் பல இணைப்புகள் பெற்று முறைகேடு: வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் ஆய்வு


ஒரே பெயரில் பல இணைப்புகள் பெற்று முறைகேடு: வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் ஆய்வு
x
தினத்தந்தி 22 Dec 2021 5:36 AM IST (Updated: 22 Dec 2021 5:36 AM IST)
t-max-icont-min-icon

வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்புகள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள வீடு, வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஒரே கட்டிடத்தில் ஒருவர் பெயரிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகள் முறையற்ற முறையில் வழங்கு வதால் மின்சார வாரியத்துக்கு இழப்பு ஏற்படுகிறது.

இதுதொடர்பாக மின்சார வாரிய வணிகப் பிரிவு தலைமைப் பொறியாளர், அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வீடு, வணிகம் மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின்சார இணைப்புகள் எந்தவிதமாக பயன்படுத்தப்படுகின்றன, ஒரே பயன்பாட்டுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகள் உள்ளனவா என்பது குறித்து அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும்.

ஆணைய விதிகள்

ஒவ்வொரு குடியிருப்பிலும் எத்தனை இணைப்புகள் கொடுக்கப்பட்டன என கணக்கெடுப்பதோடு, குளிர்சாதன கருவி, குடிநீர் வினியோகம், பொது இடங்களில் பயன்படுத்தும் மின்சார விளக்குகள், தடையற்ற மின்சார வினியோகம் செய்யும் கருவி உள்ளிட்டவற்றுக்கு ஒரே வளாகத்துக்குள் தனி இணைப்பு கண்டிப்பாக வழங்க வேண்டாம். இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஆய்வு செய்து, வாரியத்துக்கு ஏற்படும் வருவாய் இழப்பைத் தடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி அனைத்து மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தபோது, 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு முரணாக இணைப்பு வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.

உரிய நடவடிக்கை

அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பொது சேவை மின்சார இணைப்புகள் மற்றும் பிறசேவைக்கான மின்சார இணைப்புகளை கண்டறிய வேண்டும். மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள அனைத்து விதிமுறைகளையும் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.

பல இணைப்புகளை பெற்று முறையற்ற முறையில் பயன்படுத்தும் மின்நுகர்வோருக்கு நோட்டீஸ் அனுப்பி 3 மாத கால அவகாசம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story