புதுவை நகர கூட்டுறவு வங்கியில் தங்கத்துக்கு பதில் கவரிங் நகைகளை வைத்து ரூ 35 லட்சம் மோசடி


புதுவை நகர கூட்டுறவு வங்கியில் தங்கத்துக்கு பதில் கவரிங் நகைகளை வைத்து ரூ 35 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 22 Dec 2021 10:26 PM IST (Updated: 22 Dec 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

புதுவை நகர கூட்டுறவு வங்கியில் தங்கத்துக்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து ரூ.35 லட்சம் வரை மோசடி செய்து இருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

புதுச்சேரி
புதுவை நகர கூட்டுறவு வங்கியில் தங்கத்துக்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து ரூ.35 லட்சம் வரை மோசடி செய்து இருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கவரிங் நகைகள்

புதுவை லாஸ்பேட்டை மெயின்ரோட்டில் நகர கூட்டுறவு வங்கிக் கிளை உள்ளது. இங்கு மக்கள் தங்கள் அவசர தேவைக்காக தங்க நகைகளை அடமானம் வைத்து கடன்பெற்றுள்ளனர்.
அவ்வாறு அடமானமாக வைத்த தங்க நகைகளை ஊழியர் ஒருவர் எடுத்து அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்ததாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து நகர கூட்டுறவு வங்கியின் உயர் அதிகாரிகள் அந்த வங்கியில் வைத்து இருந்த நகைகளை ஆய்வு செய்தனர்.
அங்கு அடகு வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட பைகளில் உள்ள அடகு நகைகளை அதிகாரிகள் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து வருகிறார்கள். இதில் தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து நூதனமாக மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அந்த வகையில் இதுவரை ஆய்வு செய்ததில் சுமார் ரூ.35 லட்சம் வரை மோசடி செய்து இருப்பது தெரியவந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

இதுதொடர்பாக வங்கி சார்பில் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. ஆனால் வங்கி உயர் அதிகாரிகள் அரசு உயர் பதவிகளில் இருப்பவர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் வேறு ஏதேனும் மோசடி நடந்துள்ளதா? என்பது குறித்தும் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
துறை ரீதியான முழுமையான விசாரணைக்கு பின்னர் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது போலீசில் புகார் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.
தங்க நகைகளுக்கு பதிலாக அதேபோல் கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்து இருப்பது பற்றிய தகவல் அறிந்து அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் நகை என்னவானதோ? என்று பதற்றமடைந்தனர்.
நகர கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் வைத்த தங்க நகைகளுக்கு பதில் கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story