கல்லூரி மாணவர் கொலை வழக்கு: 3 மாணவிகளிடம் போலீசார் விசாரணை


கல்லூரி மாணவர் கொலை வழக்கு: 3 மாணவிகளிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 Dec 2021 11:17 PM IST (Updated: 22 Dec 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவர் கொலை வழக்கு தொடர்பாக 3 மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

வண்டலூர்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்காடு கிராமத்தில் ஆள்நாடமாட்டம் இல்லாத புறம்போக்கு நிலத்தில் 20 வயது உடைய அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் வெட்டிகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தார். கடந்த 18-ந் தேதி கும்மிடிப்பூண்டி தாசில்தார் மகேஷ் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

ஆரம்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரேம் குமார் (வயது 20) என்பது தெரியவந்தது. இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

மிரட்டல்

பள்ளி மாணவிகள் சிலரிடம் செல்போன் மூலம் நட்பு கொண்ட பிரேம் குமார், அவர்களிடம் ஆபாசமாக பேசி அதனை செல்போனில் பதிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இத்தகைய ஆபாச பேச்சு மற்றும் மாணவிகளின் புகைப்படத்தை அவர்களது பெற்றோர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அவற்றை இணையத்தில் வெளியிட போவதாக மாணவிகளை மிரட்டி அவர்களிடம் பிரேம் குமார் அடிக்கடி பணம் பறித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் இந்த பிரச்சினையால் பள்ளி மாணவிகள் 2 பேர் மனஉளைச்சலுக்கு ஆளாகினர். இதனையடுத்து அந்த மாணவிகளில் ஒருவர் தனது அக்காவான 18 வயதே நிரம்பிய கல்லூரி மாணவியிடம் விஷயத்தை சொல்லி அழுது உள்ளார். அந்த கல்லூரி மாணவி தனது இன்ஸ்ட்ராகிராம் நண்பரிடம் இந்த பிரச்சினை தொடர்பாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பள்ளி மாணவிகள் 2 பேரும், கடந்த 17-ந்தேதி நைசாக பேசி கல்லூரி மாணவர் பிரேம் குமாரை சென்னை செங்குன்றம் அடுத்த சுங்கசாவடி அருகே அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து பிரேம்குமாரை இன்ஸ்ட்ராகிராம் நண்பரின் தலையீட்டில் அவருடன் சேர்ந்து சிலரும் மோட்டார் சைக்கிளில் கல்லூரி மாணவர் பிரேம் குமாரை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

சரண்

கடத்தப்பட்ட பிரேம் குமாரை கும்மிடிப்பூண்டி அடுத்த ஈச்சங்காடு மேட்டிற்கு அழைத்து வந்த அவர்கள் யாரும் எதிர்பாராத வகையில் கொடூர கொலையை அரங்கேற்றி அங்கேயே பள்ளம் தோண்டி புதைத்து உள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இந்த பரபரப்பான கொலை வழக்கு குறித்து தனிப்படை போலீசாரின் கிடுக்கி பிடி விசாரணையின் எதிரொலியாக நேற்று முன்தினம் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நாகராஜகண்டிகை கிராமத்தை சேர்ந்த அசோக், செங்குன்றம் அடுத்த காந்தி நகரை சேர்ந்த லெபின் (22) ஆகியோர் சரண் அடைந்தனர். இது தவிர 4 பேர் என மொத்தம் 6 பேரிடம் ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவிகளிடம் விசாரணை

இதற்கிடையில் நேற்று சம்பந்தப்பட்ட 2 பள்ளி மாணவிகள், ஒரு கல்லூரி மாணவி என மொத்தம் 3 பேரை செங்குன்றம் அருகே உள்ள சுங்கச்சாவடிக்கு வரவழைத்து அவர்களிடம் சம்பவத்தன்று அங்கு நடந்தவற்றை அவர்களது பெற்றோர்களின் முன்னிலையில் போலீசார் விசாரணை நடத்தி கேட்டறிந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் வழக்கிற்கு தேவையான காட்சிகள் ஏதேனும் ஆதாரமாக அன்றைய தினத்தில் பதிவாகி உள்ளதா? எனவும் போலீசார் விரிவாக ஆய்வு செய்தனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை இன்று (வியாழன்) இறுதி கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கில் சேர்க்கப்பட உள்ளவர்கள் தரும் வாக்கு மூலத்தின் அடிப்படையில் யார்? யார்? கைது செய்யப்படுவார்கள் என்பது தெரிய வரும்.

Next Story