ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வு மாதிரிகள்: எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் கண்காட்சி


ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வு மாதிரிகள்: எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் கண்காட்சி
x
தினத்தந்தி 23 Dec 2021 12:26 AM IST (Updated: 23 Dec 2021 12:26 AM IST)
t-max-icont-min-icon

ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வு மாதிரிகள் அடங்கிய சிறப்பு கண்காட்சியை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை,

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதைக் குறிக்கும் வகையில் ‘அம்ரித் மஹோத்சவ்’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன்படி, ‘இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு’ என்ற தலைப்பில் தமிழக அரசு மாவட்ட அளவில் புகைப்பட கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

இதனை தொடர்ந்து, தமிழக அருங்காட்சியகங்கள் துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளர்கலை கூடத்தில் ஆதிச்சநல்லூர் அரும்பொருட்கள் மற்றும் கீழடி அகழாய்வு மாதிரிகள் அடங்கிய சிறப்பு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

எம்டன் கப்பல் வீசிய குண்டுகள்

இதனை, தமிழக சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். அருங்காட்சியகங்கள் துறை இயக்குனர் சி.ஏ.ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கண்காட்சியில், தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்கள் தொடர்பான தபால் தலைகள், ஓவியங்கள், பழங்கால நாணயங்கள், அவர்களின் விவரங்களுடன் புகைப்படங்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட 165 அரும்பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

அதேபோல, திப்பு சுல்தானின் 250 ஆண்டுகள் பழமையான பீரங்கி, தமிழகத்தை சேர்ந்த பொறியாளர் செண்பகராமன் சென்ற எம்டன் போர்க் கப்பலிலிருந்து வீசப்பட்ட வெடிக்காத 4 குண்டுகள், தமிழக மன்னர்கள் பயன்படுத்திய போர் ஈட்டிகள், கத்திகள், வாள்கள் உள்ளிட்ட அரிய பொருட்களும், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் மதராஸ் மாகாணத்தின் கவர்னர்கள் பயன்படுத்திய குதிரை வண்டிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

1 மாதம் நடக்கும் கண்காட்சி

அதேபோல், ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடியில் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சுடுமண் ஈமத்தாழிகள், இரும்பு வெண்கலம் உள்ளிட்டவற்றால் செய்த பொருட்கள், செங்கற்களாலான கட்டமைப்புகள், சுடுமண் உறை கிணறுகள், மழைநீர் வடிகால், கூரை ஓடுகள் போன்றவற்றின் மாதிரிகளை மிக தத்ரூபமாக வடிவமைத்துக் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. கண்காட்சி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே பொதுமக்கள் ஆர்வமாக கண்டுகளித்தனர்.

அதன்படி, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களின் புகைப்பட கண்காட்சி மற்றும் அகழ்வாய்வு மாதிரிகள் கண்காட்சி சுமார் ஒரு மாதம் நடைபெறும். இக்கண்காட்சிகளைப் பொதுமக்கள் இலவசமாகக் கண்டுகளிக்கலாம் என்று டாக்டர் பி.சந்திரமோகன் கூறினார்.

Next Story