“இனி விரல் நுனியில் அரசின் திட்டங்கள்” : தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


“இனி விரல் நுனியில் அரசின் திட்டங்கள்” : தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 23 Dec 2021 1:41 PM IST (Updated: 23 Dec 2021 1:41 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சரின் அலுவலக அறையில் இருந்தே அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் மீதான நடவடிக்கையை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

மத்திய பிரதேசம், ஆந்திரா, நாகலாந்து, இமாசலப்பிரதேசம், உத்தரக்காண்ட், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அம்மாநில முதல்-மந்திரிகளுக்கான மின்னணு தகவல் பலகை பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில்.அலுவலக அறையில் இருந்தபடியே அரசின் அனைத்து திட்டங்கள், அறிவிப்புகளின் மீதான நடவடிக்கையை கண்காணிக்கும் வகையில், மின்னணு தகவல் பலகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

தகவல் தொழில் நுட்பவியல் துறை சார்பில் முதல்-அமைச்சருக்காக மின்னணு தகவல் பலகை உருவாக்கப்பட்டுள்ளது. தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அலுவலக அறையில் இருந்து மின்னணு தகவல் பலகை மூலம் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட மென்பொறியாளர்கள் இணைந்து மின்னணு தகவல் பலகையை தயார் செய்துள்ளனர்.  நிகழ்நிலை புள்ளிவிவரங்களுடன் கூடிய இந்த தகவல் பலகை முதல்-அமைச்சர் அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குறுதிகள், வெளியிட்ட அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றம் குறித்த தவகல்கள் தகவல் பலகையில் இடம்பெற்றுள்ளது. நாளைய திட்டம், அடுத்த ஒரு ஆண்டுக்கான திட்டம் உள்ளிட்ட அனைத்தும் தகவல்களும் பலகையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எந்த கிராமத்தில் என்ன பணி நடைபெறுகிறது, எங்கு தொய்விருக்கிறது? என முதல்-அமைச்சர் அறிந்துகொள்ளும் வகையில் மின்னனு தகவல் பலகை தயார் செய்யப்பட்டுள்ளது. தன் அறையில் இருந்தபடியே, இன்றைய தங்கம் விலை நிலவரம், காய்கறி விலை நிலவரம் என அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story