4 வயது குழந்தை உயிரிழந்த விவகாரம்: 2 பேரின் அடையாளம் தெரிந்தால் தகவல் தெரிவிக்கலாம் - மாவட்ட எஸ்.பி


4 வயது குழந்தை உயிரிழந்த விவகாரம்: 2 பேரின் அடையாளம் தெரிந்தால் தகவல் தெரிவிக்கலாம் - மாவட்ட எஸ்.பி
x
தினத்தந்தி 23 Dec 2021 8:31 AM GMT (Updated: 23 Dec 2021 8:31 AM GMT)

விழுப்புரத்தில் 4 வயது குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பான புதிய சிசிடிவி காட்சி நேற்று வெளியாகி இருந்தன.

விழுப்புரம்,

விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் மேல்தெரு பகுதியில் உள்ள ஒரு மருந்துக்கடை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இஸ்திரி தள்ளுவண்டியில் 4 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கடந்த சில நாட்களுக்கு முன் மர்மமான முறையில் பிணமாக கிடந்தான். அந்த தள்ளுவண்டியில் துண்டை விரித்து, அதன் மீது சிறுவன் கிடத்தப்பட்டிருந்தான்.

இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து, விழுப்புரம் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சிறுவனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த சிறுவன் யார்? எந்த ஊரை சேர்ந்தவன் என்ற விபரம் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் உணவு இல்லாமல் பட்டினியால் அவன் இறந்திருப்பது தெரியவந்தது.

சிறுவனின் ஆடைகளை பார்க்கும்போது, அரசு அங்கன்வாடி குழந்தைகளுக்கான ஆடை என தெரியவந்தது. இதையடுத்து அங்கன்வாடி மையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதன் மூலம் ஏதேனும் தகவல் கிடைக்குமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் கிடைத்த சிசிடிவி பதிவு ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் சிறுவனை ஒரு நபர் தோளில் சுமந்து வருவதும், அவருடன் மற்றொருவர் வருவதும் பதிவாகி உள்ளது. இதன்மூலம் அவர்கள் இருவரும் சிறுவனை தள்ளுவண்டியில்  போட்டுச்சென்றது உறுதியாகி உள்ளது. அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

வெளி மாநிலத்தைச் சேர்ந்த கடத்தல் கும்பல் இந்த சிறுவனை தனிமைப்படுத்தி உணவு கொடுக்காமல் வைத்திருந்து இறந்தபின்பு தள்ளுவண்டியில் போட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டது. சிறுவனின் புகைப்படம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநில போலீசாருக்கு அனுப்பிவைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  4 வயது குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வீடியோவில் இருக்கும் 2 பேரின் அடையாளம் தெரிந்தால் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக 04146- 222172 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Next Story