ஓய்வு பெற்ற அரசு அதிகாரி மகளை திருமணம் செய்து நகை-பணம் மோசடி
அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஓய்வு பெற்ற அரசு அதிகாரி மகளை திருமணம் செய்து நகை -பணத்தை மோசடி செய்த கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஓய்வு பெற்ற அரசு அதிகாரி மகளை திருமணம் செய்து நகை -பணத்தை மோசடி செய்த கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற அதிகாரி
லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். கல்வித்துறை அலுவலகத்தில் இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் பூரணி (வயது 31). இவருக்கும், நெல்லையை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
ஆறுமுகம் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் 100 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் வரதட்சணையாக கேட்டனர்.
திருமணத்திற்கு பின் ஆறுமுகம் தனது மனைவியை அமெரிக்கவுக்கு அழைத்துச் சென்று விடுவார். அதற்கும் பெண் வீட்டார் தான் பணம் தர வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனை நம்பி சென்னையில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை பூரணி கைவிட்டார்.
அடித்து துன்புறுத்தல்
திருமணம் முடிந்து சில நாட்களுக்கு பின் ஆறுமுகம் மட்டும் தனியாக அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அப்போது பூரணி தன்னையும் அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். ஆனால் அவர் பாஸ்போர்ட்டில் பெயர் இல்லை என்று மழுப்பலாக கூறிவிட்டு அமெரிக்கா சென்றார்.
இதுதொடர்பாக மாமனார், மாமியாரிடம் பூரணி முறையிட்டுள்ளார். ஆனால் வரதட்சணை கொண்டுவரவில்லை என கூறி பூரணியை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தனது கணவரை பூரணி செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றபோது முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து தனது பெற்றோர் வீட்டிற்கு புறப்பட்டு வந்து விட்டார்.
3 பேர் மீது வழக்கு
பின்னர் பூரணி வில்லியனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது வாழ்க்கையை சீரழித்த கணவர் ஆறுமுகம், மாமனார் நெல்லையப்பன், மாமியார் பொன்னம்மாள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகல்யா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story