புதுவை கூட்டுறவு வங்கியில் ஒரு கோடி மதிப்பிலான தங்கம் மோசடி
புதுவை கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 410 பவுன் நகைகளை கையாடல் செய்த 2 ஊழியர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்
புதுவை கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 410 பவுன் நகைகளை கையாடல் செய்த 2 ஊழியர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
புதுவை லாஸ்பேட்டை நகர கூட்டுறவு வங்கி கிளையில் பல்வேறு தேவைகளுக்காக வாடிக்கையாளர்கள் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். அதை திருப்ப வந்தபோது நகையை தராமல் வங்கி ஊழியர் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்து விசாரித்ததில் அந்த ஊழியர் மோசடியில் ஈடுபட்ட விவரம் அறிந்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றிய விவரம் தெரியவந்ததும் அதிகாரிகள் வங்கிக்கு நேரடியாக வந்து அடகு நகைகளை சரிபார்க்கும் பணிகளை மேற்கொண்டனர். இந்த சோதனையில் லாக்கரில் 500க்கும் மேற்பட்ட பைகளில் வைக்கப்பட்டிருந்த நகைகளை ஒவ்வொன்றாக சோதனையிட்டனர்.
411 பவுன் நகைகள்
அப்போது 28 வாடிக்கையாளர்களின் அடகு நகைகள் 80 பைகளில் கவரிங் நகைகளை வைத்து இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்ததில் சம்பந்தப்பட்ட பொறுப்பு அதிகாரியே தங்க நகைகளை எடுத்து விட்டு அதற்கு பதில் கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்து இருப்பது அம்பலமானது.
இந்த வகையில் மொத்தம் 411 பவுன் நகைகள் கையாடல் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 19 லட்சம் ஆகும்.
இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது லாக்கர் சாவியை வைத்திருந்த வங்கி தலைமை காசாளர் கணேசன் (வயது 56), உதவி காசாளர் விஜயகுமார் என்ற சரவணன் (42) ஆகியோர் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
2 அதிகாரிகள் கைது
இதுகுறித்து புதுச்சேரி கூட்டுறவு வங்கி கடன் பிரிவு மேலாளரும், கண்காணிப்பு அதிகாரியுமான அன்பழகன் கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், வெங்கடாஜலபதி ஆகியோர் மோசடி உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து வங்கி அதிகாரிகளை தேடி வந்தனர்.
இந்தநிலையில் தங்களது வீடுகளில் பதுங்கியிருந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் அதிரடியாக நேற்று கைது செய்தனர். மேலும் நகர கூட்டுறவு வங்கியில் கையாடல் செய்த நகைகளை வேறு இடத்தில் அடகு வைத்திருந்ததை கண்டுபிடித்து அவற்றை போலீசார் மீட்டனர். தொடர்ந்து மேலும் சில நகைகளை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நகர கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களின் நகைகளை கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்ட 2 அதிகாரிகள் கைதான சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story