ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு போக்சோ வழக்கில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு போக்சோ வழக்கில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பாலியல் பலாத்காரம்
புதுச்சேரியை சேர்ந்த 14 வயது சிறுமி 8-ம் வகுப்பு வரை படித்து இருந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக அவள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, உறவினருக்கு சொந்தமான அழகுநிலையத்தில் அத்தைக்கு உதவியாக இருந்து வந்தார். கடந்த 29.6.2019-ம் அன்று படிப்பை தொடரும்படி சிறுமியை அவளது அத்தை கண்டித்தார். இதனால் கோபித்துக்கொண்ட சிறுமி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
புதுவை அண்ணா சாலையில் தனியாக நடந்து சென்ற சிறுமியை விழுப்புரம் மாவட்டம் காக்குப்பத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜசேகர் (வயது 38) தனது ஆட்டோவில் கடத்தி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். மறுநாள் அந்த சிறுமியை புதுச்சேரி பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு ராஜசேகர் தப்பி ஓடி விட்டார்.
10 ஆண்டு கடுங்காவல் தண்டனை
இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராஜசேகருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், போக்சோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும் விதித்து தலைமை நீதிபதி செல்வநாதன் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் புதுவை அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story