கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை: விமான கட்டணம் 2 மடங்கு அதிகரிப்பு


கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை: விமான கட்டணம் 2 மடங்கு அதிகரிப்பு
x
தினத்தந்தி 24 Dec 2021 12:41 AM IST (Updated: 24 Dec 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் 2 மடங்கு அதிகரித்துள்ளது. தூத்துக்குடிக்கு ரூ.11,800 ஆக உயர்ந்தது.

ஆலந்தூர்,

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சனி, ஞாயிறு 2 நாள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கும் தென்மாவட்டங்களைச்சேர்ந்த மக்கள், தங்கள் சொந்த ஊருக்கு விமானத்தில் பயணம் செய்கின்றனர்.

இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம், கொச்சி செல்லும் விமானங்களில் நேற்றும், இன்றும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் 4 விமானங்களும், மதுரைக்கு 6 விமானங்களும், திருவனந்தபுரத்துக்கு 2 விமானங்களும், கொச்சிக்கு 2 விமானங்களும் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் பெரும்பாலான இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. ஒரு சில இருக்கைகள் மட்டுமே உள்ளன.

2 மடங்கு கட்டணம் உயர்வு

இதையடுத்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் இந்த விமானங்களில் டிக்கெட் கட்டணம் வழக்கத்தைவிட 2 மடங்கு திடீரென அதிகரித்து உள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வழக்கமான டிக்கெட் கட்டணம் ரூ.4,200. ஆனால் நேற்று ரூ.10,400-ம் இன்று(வெள்ளிக்கிழமை) பயணிக்க ரூ.11,800-ம் என உயர்ந்துள்ளது.

மதுரைக்கு வழக்கமான கட்டணம் ரூ.3,800. ஆனால் ரூ.7,700 முதல் ரூ.9,600 வரை அதிகரித்து உள்ளது. திருவனந்தபுரம் செல்ல சாதாரண நாட்களில் ரூ.4,200 கட்டணம். கிறிஸ்துமஸ் பண்டிகை நெரிசலால் ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.10,700 வரை அதிகரித்து உள்ளது. கொச்சிக்கு செல்ல ரூ.4 ஆயிரமாக இருந்த கட்டணம் ரூ.6,700 முதல் ரூ.9,500 வரை அதிகரித்தது.

வழக்கமான நடைமுறைதான்...

மேலும் பலர் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை நாட்களான சனி, ஞாயிறை சுற்றுலா தலமான கோவாவில் கொண்டாட செல்வார்கள். இதனால் சென்னையில் இருந்து கோவா செல்லும் விமானங்களிலும் கட்டணம் அதிகரித்து உள்ளது.

இதுபற்றி விமான நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, “விமான கட்டணங்களை உயா்த்தவில்லை. விமானங்களில் பல அடுக்கு கட்டணங்கள் உள்ளன. அதில் குறைந்த கட்டணம், மீடியம் கட்டணம் கொண்ட டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. தற்போது அதிக கட்டணம் கொண்ட இருக்கைகள் மட்டுமே உள்ளன. அதுதான் பயணிகளுக்கு கட்டண உயா்வுபோல் தெரிகிறது. இது வழக்கமான நடைமுறைதான்” என்றனர்.

Next Story