'கிறிஸ்தவர்களின் உரிமைகளை பாதுகாக்க தி.மு.க. என்றைக்கும் துணை நிற்கும்'-மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
"உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு" என ஈகையையும், "ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டு" என சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையையும், எதிரிகளையும் நேசியுங்கள், பகைவருக்கும் நன்மை செய்யுங்கள்" என எக்காலத்தும் போற்றத்தக்க உயர்ந்த அன்பையும் போதித்த மனிதநேய மாணிக்கம் இயேசு பிரான் பிறந்த நாளை உலகெங்கும் உள்ள கிறித்துவ மக்கள் கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடுகின்றனர்.
அன்பும், அமைதியும் அனைவரது வாழ்விலும் தவழ்ந்திடவேண்டும் என்ற உயரிய நோக்கோடு இந்த விழா கொண்டாடப்படுவதுடன், அன்பினை பரிமாறிக்கொள்ள ஒருவருக்கொருவர் பரிசுப்பொருட்களையும், ஏழை-எளியோருக்கு உதவிகளையும் வழங்கி மகிழ்கின்றனர். அனைவரும் சமம் என்ற சமத்துவ கொள்கை இந்த நாளில் மிளிர்வதை காண்கிறோம்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும், தமிழ் மொழியின் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றிய கிறிஸ்தவ மக்களின் நலனையும், உரிமைகளையும் பாதுகாப்பதில் தி.மு.க.வும், தி.மு.க. அரசும் என்றைக்கும் தோளோடு தோள் சேர்ந்து துணை நின்றிருக்கிறது. அதேவழியில் தொடர்ந்து பயணித்துச் சிறுபான்மை மக்களின் உரிமைகளை நமது அரசு பாதுகாக்கும்.
மகிழ்ச்சி பொங்க கொண்டாடப்படும் இந்த விழாவை கொரோனா கால பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தனிமனித இடைவெளியை கடைபிடித்து, பாதுகாப்புடன் கொண்டாடவேண்டும் என்று அன்போடு கேட்டு, என் வாழ்த்துகளை பகிர்ந்துகொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story