புதுவையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புதுவை தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புதுவை தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
ஏசு கிறிஸ்து 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 25-ந்தேதி பெத்லகேம் என்னும் ஊரிலுள்ள ஒரு மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார் என்று புனித நூலான ‘‘பைபிளில்’’ கூறப்பட்டுள்ளது.
இந்த நாளை ‘கிறிஸ்துமஸ் பண்டிகை’ என்று உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு சில நாட்களுக்கு முன்பே கிறிஸ்தவர்கள் வீடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது.
வீட்டு வாசல்களில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நட்சத்திரங்களை தொங்க விட்டிருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் மரம் வைத்து அதை அலங்கரித்து அதில் குழந்தைகளுக்காக சிறு, சிறு பரிசு பொருட்களை தொங்கவிட்டு இருந்தனர்.
விசேஷ பிரார்த்தனைகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேவாலயங்களில் விசேஷ பிரார்த்தனைகள் நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி, காலை 7 மணி, 8.30 மணி, மாலையில் என்று ஒவ்வொரு தேவாலயங்களிலும் பிரார்த்தனைகள் நடத்தப் படுகின்றன.
புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ரெயில் நிலையம் அருகே உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா அதிபர் குழந்தைசாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
முன்னதாக 11.30 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பாடலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து திருப்பலி மற்றும் கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு திருப்பலி நடந்தது. அப்போது இயேசு கிறிஸ்து பிறப்பதை குறிக்கும் வகையில் குழந்தை ஏசுவின் சொரூபம், கோவில் வாளகத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேஷ குடிலில் வைக்கப்பட்டது. அப்போது ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
ஜென்மராக்கினி மாதா தேவாலயம்
மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா தேவாலயத்தில் புதுச்சேரி- கடலூர் உயர்மறை மாவட்ட முதன்மை குரு அருளானந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
இரவு 11.50 மணிக்கு ஏசு பிறப்பை குறிக்கும் வகையில் குழந்தை ஏசுவின் சொரூபம், ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேஷ குடிலில் வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள தூயயோவான் தேவாலயம், ஆட்டுப்பட்டி அந்தோணியார் ஆலயம், நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், தட்டாஞ்சாவடி பாத்திமா தேவாலயம், ரெயின்போ நகர் புனித ஜான்மரி வியான்னி ஆலயம், வில்லியனூர் மாதா கோவில், அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், கொருக்கமேடு புனித அன்னம்மாள் ஆலயம் உள்பட அனைத்து தேவாலயங்களிலும் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலியும், பிரார்த்தனைகளும் நடந்தன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story