கருப்பட்டியில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை தமிழக அரசு உத்தரவு


கருப்பட்டியில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 25 Dec 2021 2:42 AM IST (Updated: 25 Dec 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

கருப்பட்டியில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் வெல்லம் மற்றும் பனங்கருப்பட்டியில் கலப்படம் செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் வருகின்றன.

பனங்கருப்பட்டி, அச்சு வெல்லம், குண்டு வெல்லம் ஆகியவற்றிற்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெல்லம், கருப்பட்டி போன்றவற்றின் மாதிரிகள் அவ்வப்போது எடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் 232 மாதிரிகள் எடுக்கப்பட்டு 48 மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேதிப்பொருட்கள் கலப்பு

பனங்கருப்பட்டி, வெல்லம் தயாரிக்கும்போது வெள்ளை சர்க்கரை (சீனி) மற்றும் கெமிக்கல் சேர்த்து தயாரிக்கப்படுவதாகவும், குண்டு வெல்லம், அச்சு வெல்லம் தயாரிக்கும் போது மைதா, வெள்ளை சர்க்கரை, சூப்பர் பாஸ்பேட், கால்சியம் கார்பனேட், சோடியம் ஹைட்ரோ சல்பேட் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கின்ற வேதிப்பொருட்களும் மற்றும் செயற்கை நிறமூட்டிகளும் கலப்படம் செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளது.

கலப்படமற்ற வெல்லம் அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். கலப்படம் செய்யப்பட்ட வெல்லம் வெளிர் பழுப்பு அல்லது அடர் மஞ்சள் அல்லது வெளிர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

கலப்படமற்ற பனங்கருப்பட்டி, வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும். சர்க்கரை கலந்த பனங்கருப்பட்டி கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும்

கண்காணிப்பு கேமரா

வெல்லம் மற்றும் பனங்கருப்பட்டி ஆகியவை தயார் செய்யப்படும் இடங்களின் முழு உற்பத்தி செயல்முறைகளை கண்காணிக்கவும், புகார்கள் எதுவும் பெறப்பட்டால் உற்பத்தி செய்யப்பட்ட செயல்முறைகளை மறு ஆய்வு செய்யவும், அனைத்து தயாரிப்பு நிலையங்களிலும் மூலப்பொருட்களின் வருகையில் இருந்து, உற்பத்தி செய்யப்படும் இறுதி நிலை வரை உள்ள அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புகார் அளிக்க ‘வாட்ஸ் அப்’

போதிய விழிப்புணர்வு இல்லாததால் பழுப்பு நிறத்தில் உள்ள வெல்லத்தை விட மஞ்சள், ஆரஞ்சு நிறத்தில் உள்ள கவர்ச்சிகரமான வண்ணங்களில் உள்ள வெல்லம் சிறந்தது என தவறான கருத்து நிலவுகிறது. இத்தகைய மஞ்சள், ஆரஞ்சு, வெளிர் நிறங்களில் விற்கப்படும் வெல்லத்தை வாங்க வேண்டாம் என்றும், இவ்வகையான வெல்லங்கள் விற்பனை செய்தால் அதுகுறித்து புகார் அளிக்கவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வெல்லம், கருப்பட்டி மற்றும் இதர உணவுப்பொருட்களில் செய்யப்படும் கலப்படம் மற்றும் தரம் குறைவு தொடர்பான புகார்களை 94440-42322 என்ற ‘வாட்ஸ் அப்' எண்ணிற்கு தெரிவிக்கலாம். புகார் மீது 48 மணிநேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story