சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை மதிக்காமல் செயல்படும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பதவியை பறித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை மதிக்காமல் செயல்படும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பதவியை பறித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
x
தினத்தந்தி 25 Dec 2021 3:28 AM IST (Updated: 25 Dec 2021 3:28 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு உத்தரவுகளை மதிக்காமல் செயல்படும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பதவியை பறிப்பதோடு, அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை திருவொற்றியூரில் பழைய இரும்பு மற்றும் மரக்கடையை எஸ்.அபுபக்கர், எஸ்.முகமது அலி ஆகியோர் வைத்துள்னர். இவர்களது கடைகள் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டுப்பட்டுள்ளதாக கூறி கடந்த அக்டோபர் மாதம் மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்' வைத்தனர். அவற்றை இடிக்கவும் முயன்றனர்.

அதையடுத்து கட்டிட விதிமீறல் தொடர்பாக, தமிழ்நாடு நகர மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அரசிடம் கடைக்காரர்கள் மேல்முறையீடு செய்தனர். இதனால் அந்த கட்டிடத்தை அதிகாரிகள் இடிக்கவில்லை.

அதேநேரம், மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கடைக்காரர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

உள்நோக்கம்

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.விஜயகுமார் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது மனுதாரர் தரப்பில், ‘எங்களைப் போலவே வேறு சிலர் அந்த பகுதியில் கடை வைத்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், உள்நோக்கத்துடன் எங்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கின்றனர். 1970-ம் ஆண்டு இந்த நிலத்தை வாங்கினோம். இதுநாள் வரை எந்த ஒரு நோட்டீசும் அனுப்பாத அதிகாரிகள், இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் ஏன் இப்படி ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் என்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை’ என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அகற்றப்படும்

மாநகராட்சி தரப்பில் ஆஜரான வக்கீல், ‘மனுதாரர்கள் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும், போதிய அவகாசம் வழங்கியும், கட்டுமானத்தை நிறுத்த உத்தரவிட்டும் அதை கண்டுகொள்ளவில்லை. மனுதாரர்கள் மட்டுமல்ல, வேறு யாராவது அரசு நிலத்தை ஆக்கிரமித்தாலும் அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படும். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பதவி பறிப்பு

விதிமீறல் கட்டிடம் தொடர்பாக, நகரம் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் விண்ணப்பங்களை அதிகாரிகள் விரைவாக பரிசீலித்து முடிக்க வேண்டும் என்று இந்த ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. ஆனால் இதுபோன்ற மனுக்களை பரிசீலிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுகளை அமல்படுத்துவது இல்லை. இந்த உத்தரவுகளை கண்டுகொள்வதும் இல்லை. இதுபோன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பதவியை பறிக்க வேண்டும். அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

கீழ்ப்படியாமை

ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளை மதிக்கவில்லை என்றால், அது கண்டிப்பாக அதிகாரிகள் பணியில் நாணயமாக இல்லை, கீழ்ப்படியாமை என்றுதான் அர்த்தம். இதுபோல கோர்ட்டு உத்தரவுகளை மதிக்காமல் செயல்படும் அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பது என்பது இரண்டாம் கட்டமாகத்தான். அவர்களுக்கு சிறை தண்டனை வழங்குவதுதான் முதல் கட்டமாக இருக்க வேண்டும். எனவே, சட்டப்படி இதுபோன்ற விண்ணப்பங்களை 7 வேலை நாட்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

அரசு நிலம் ஆக்கிரமிப்பிக்கப்படுகிறதா என்பதைக் கண்டறிய தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். ஒரு கட்டிடம் கட்டும்போது, உரிய இடைவெளியில் அதை ஆய்வு செய்ய வேண்டும். முதல் தளம் அமைக்கும்போதும், 2-வது தளம் அமைக்கும்போதும் அங்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

அபராதம்

கட்டிட விதிமீறலை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியும்போது, அடுத்தக்கட்ட அனுமதிகளை வழங்காமல் சட்டவிரோத கட்டுமானத்தை தடுக்க முடியும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். மனுதாரர்களின் விண்ணப்பத்தை தினந்தோறும் என்ற அடிப்படையில் 7 நாட்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

இந்த வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்த பின்னர், மனுதாரர்கள் மேலும் 2 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதை ஏற்க முடியாது. அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழக்குச்செலவு (அபராதம்) விதிக்கிறோம். அந்த தொகையை சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள சுடரொளி அறக்கட்டளைக்கும், திருவேற்காடு பெருமாள் அக்ரகாரத்தில் உள்ள பசு மடத்துக்கும் மனுதாரர்கள் வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Next Story