முதல் அமைச்சரின் குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் போலீசாரிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிய போலீஸ் கமிஷனர்


முதல் அமைச்சரின் குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் போலீசாரிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிய போலீஸ் கமிஷனர்
x
தினத்தந்தி 25 Dec 2021 3:38 AM IST (Updated: 25 Dec 2021 3:38 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சரின் குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால், 431 போலீசாரை நேரடியாக பார்த்து பேசி குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களிடம், உயர் அதிகாரிகள் குறைகளை கேட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் சென்னை போலீசில் பணியாற்றும் போலீசாரின் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நேற்று பகலில் தொடங்கி இரவு வரை நீடித்தது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடந்த இந்த குறை தீர்க்கும் முகாமில் காவலர் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை கலந்துகொண்டு போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலை நேரடியாக சந்தித்து மனுக்களை கொடுத்து, தங்களது குறைகளை தெரிவித்தனர்.

பகல் 12 மணி அளவில் தொடங்கிய இந்த குறை தீர்க்கும் முகாமுக்கு 960 போலீசார் குறைகளை தெரிவிக்க வந்திருந்தனர். அவர்கள் இருக்கைகளில் உட்கார வைக்கப்பட்டனர். வரிசையாக ஒவ்வொருவரை அழைத்து குறைகளை கேட்டறிந்து கமிஷனர் சங்கர்ஜிவால் மனுக்களை வாங்கினார். பதவி உயர்வு, பணிமாறுதல் போன்ற பல்வேறு குறைகளை தெரிவித்து மனுக்களை கொடுத்தனர்.

431 பேர்களிடம்...

நேற்றைய முகாமில் சுமார் 431 பேர்களை நேரடியாக சந்தித்து, கமிஷனர் சங்கர்ஜிவால் மனுக்களை வாங்கி குறைகளை கேட்டறிந்தார். 960 பேர்களில், மீதி உள்ளவர்களிடம் வரும் திங்கட்கிழமை அன்று மீண்டும் கமிஷனர் சங்கர்ஜிவால் மனுக்களை நேரடியாக வாங்கி குறைகளை கேட்டறிவார் என்று கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் லோகநாதன், இணை கமிஷனர் சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Next Story