கோவில் நிலத்தில் கல்லூரி அமைக்கும் நடைமுறையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


கோவில் நிலத்தில் கல்லூரி அமைக்கும் நடைமுறையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 Dec 2021 4:51 AM IST (Updated: 25 Dec 2021 4:51 AM IST)
t-max-icont-min-icon

கோவில் நிலத்தில் கல்லூரி அமைக்கும் நடைமுறையில் தற்போதையே நிலையே தொடரவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் தமிழரசி தெய்வசிகாமணி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகாவில் உள்ள சித்தளந்தூர் அத்தனூரம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் சார்பில் அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்தனூரம்மன் கோவிலுக்குச் சொந்தமான 14.5 ஏக்கர் நிலத்தில் 5 ஏக்கர் நிலம் கல்லூரி அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தனூரம்மன் கோவிலுக்கு எந்த பயனும் இல்லை’ என்று கூறியிருந்தார்.

தீர்ப்புக்கு கட்டுப்பட்டது

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஏழை மாணவர்களின் கல்வித்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அங்கு கல்லூரி அமைக்க அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதற்காக நிலம் ஒதுக்க அத்தனூரம்மன் கோவில் நிர்வாகக்குழுவும் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதன்படி அங்கு விரைவில் கல்லூரி தொடங்கப்படும்’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் கூறியிருப்பதாவது:-

கோவில் நிலத்தில் கல்லூரி தொடங்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்குவது என்பது அந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய நிலை

இந்த வழக்கைப் பொறுத்தவரை அர்த்தநாரீஸ்வரர் கோவில் சார்பில் கல்லூரி தொடங்கும் நடைமுறையில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். இந்த வழக்குக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும். விசாரணையை ஜனவரி 6-ந் தேதிக்குத் தள்ளிவைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story