விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்க போகிறாரா...? பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தனித்துப் போட்டியிடுவோம் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
சென்னை,
கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு புனித தோமையார்மலை தேவாலயத்தில் வழிபாடு நடத்திய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் , 50 க்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகள் மற்றும் பிரியாணி பொட்டலங்களை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தனித்துப் போட்டியிடுவோம். அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் கட்சியில் செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தினர். ஒட்டுமொத்த நிர்வாகிகளின் கருத்தை பெற்று கட்சியில் செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்துவது குறித்த அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடுவார்.
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் முடிவு வரவேற்கத்தக்கது , இதன் மூலம் பெண்கள் கல்லூரி படிப்பை முடித்து , உடல் , மன ரீதியாக பாதுகாப்புடன், எதிர்காலத்தை திட்டமிட உதவும் என்றாலும் கிராமங்களில் 18 வயதில் திருமணம் செய்யவே பெரும்பாலானோர் நினைக்கின்றனர். எனவே இது தொடர்பாக இந்தியா முழுவதும் மக்கள் கருத்தையும் கேட்க வேண்டும். மக்கள் வரவேற்றால் அரசாணை பிறப்பிக்கலாம்.
அரசு மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டும். பொதுமக்கள் தவறாமல் முகக் கவசத்தை அணிய வேண்டும். கொரோனா , ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருப்பதால் அரசு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்.
மேடையில் சீமான் செய்த செயல் தவறானது .சீமான் செய்தது , பதிலுக்கு தி.மு.க.வினர் செய்தது அனைத்தும் அரசியல்தான். தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் விதமாக அவர்கள் இப்படி செய்துள்ளனர்.
விஜயகாந்த் படங்களில் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் தவறானது, விஜயகாந்த் படங்களில் எதுவும் நடிக்கவில்லை.விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக வந்த செய்தியை பார்த்து நான் வியந்தேன் , விஜயகாந்த் தற்போது கட்சிப்பணிகளை பார்ப்பதுடன் , உடற்பயிற்சியை மேற்கொண்டு ஓய்வாக இருக்கிறார்.ஒருவேளை விஜயகாந்த் நடிப்பதாக இருந்தால் கட்சியில் தலைமைக் குழு மூலம் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story