பொதுமக்களுக்கு சேவை செய்யாத அதிகாரிகளால் எந்த பயனும் இல்லை: டி.ஆர்.பாலு எம்.பி


பொதுமக்களுக்கு சேவை செய்யாத அதிகாரிகளால் எந்த பயனும் இல்லை: டி.ஆர்.பாலு எம்.பி
x
தினத்தந்தி 26 Dec 2021 5:58 AM IST (Updated: 26 Dec 2021 5:58 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களுக்கு சேவை செய்யாத அதிகாரிகளால் எந்த பயனும் இல்லை. அவர்கள் தங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்தார்.

குறை தீர்ப்பு கூட்டம்

சென்னையை அடுத்த தாம்பரம் முத்துலிங்கம் தெருவில் உள்ள மாநகராட்சி டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி.யுமான டி.ஆர்.பாலு கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

பின்னர் கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. பேசியதாவது:-

எந்த பயனும் இல்லை

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அவருக்கு கீழே பணியாற்றும் சில அதிகாரிகள் பொதுமக்களை அலைக்கழித்து வருகிறார்கள். ஒரு சான்றிதழ் வாங்க சென்றால்கூட முறையான பதிலை சொல்லாமல் அலைக்கழிப்பது தொடர்கிறது.

பொதுமக்கள் எங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்து உள்ளார்கள். வாக்களித்த மக்களுக்கு நாங்கள் பணியாற்ற வேண்டியுள்ளது. சில அதிகாரிகள் பொதுமக்களை அலைக்கழித்து வருவதை சுட்டிக்காட்டுவது என் கடமை. மாவட்ட கலெக்டருக்கு கீழே வேலை பார்க்கும் அதிகாரிகள் சரியாக இல்லை என்றால் அவர்களை வேறு ஊருக்கு மாற்றி விடுங்கள். பொதுமக்களுக்கு சேவை செய்யாத அதிகாரிகளால் எந்த பயனும் இல்லை.

தவறுகளை திருத்திக்கொள்ளவும்

இதை நான் மறைமுகமாகத்தான் சொல்கிறேன். மக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள், தங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். முதல்-அமைச்சர் வெளிப்படையான ஆட்சி நடத்தி வருகிறார். முதல்-அமைச்சர் அறையிலேயே திட்டப்பணிகள் குறித்து மின்னணு தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் பணிகள் எவ்வாறு செய்யப்பட்டு வருகிறது என்பது குறித்த விவரங்களை மின்னணு தகவல் பலகை வைத்து மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story