இன்று 17-வது சுனாமி நினைவு தினம்: பொதுமக்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி
17-வது சுனாமி நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
சென்னை,
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் சுனாமி எனும் ஆழிப்பேரலை எழுந்து கடற்கரையோர பகுதிகளை சூறையாடியது. இதில் மொத்தம் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். வயது வித்தியாசம் இன்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உயிர் நீத்தனர். அன்று குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களின் கதறல், 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்னமும் கடற்கரையோரம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், 17-வது சுனாமி நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சுனாமி நினைவு தினத்தையொட்டி கடலூரில் மீனவர்கள் அமைதி ஊர்வலம் நடத்தினர். கடலில் பால் மற்றும் பூக்களை கொட்டி மீனவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் சுனாமி நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக இன்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடலூரில் மீன் விற்பனை அங்காடிகள் மூடப்பட்டுள்ளன.
இதைபோல நாகப்பட்டிணம் மாவட்டத்தில் சுனாமி நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. கடற்கரையில் உள்ள நினைவு ஸ்தூபிக்கு பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர், மேலும் கடற்கரையில் பால் ஊற்றியும் மலர் தூவியும், அஞ்சலி செலுத்தினார்கள்.
சுனாமி பேரலை தாக்கி 16 ஆண்டுகள் கடந்து இருந்தாலும், மீனவர்கள் தங்களது உறவினர்களை இழந்த தாக்கதில் இருந்து இன்னும் மீளவில்லை என்றே சொல்லலாம்.
Related Tags :
Next Story