சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இரா.நெடுஞ்செழியன் சிலை; மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
இரா.நெடுஞ்செழியன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இரா.நெடுஞ்செழியன்
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் கடந்த 1920-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி ராஜகோபாலானார்-மீனாட்சி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் இரா.நெடுஞ்செழியன்.
1944-ம் ஆண்டு தனது 24-வது வயதில் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பெரியாருடன் சேர்ந்து பணியாற்றினார்.
30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ள இவர், ஏராளமான கதை, கட்டுரைகளையும் எழுதி உள்ளார். தனது அறிவார்ந்த மேடை பேச்சால் பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட திராவிட இயக்க தலைவர்களின் பேரன்பை பெற்றவர்.
‘நாவலர்’ என அழைக்கப்பட்டார்
அரசியல், இலக்கிய மேடைகளில் தனது நாவன்மையால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இதன் காரணமாகவே ‘நாவலர்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.
அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரது அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பு வகித்தவர். அண்ணா, எம்.ஜி.ஆர். மறைவின்போது இடைக்கால முதல்-அமைச்சராக பொறுப்பில் இருந்தார். தி.மு.க., அ.தி.மு.க.வில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
2020-ம் ஆண்டு ஜூலை மாதம் அவரது நூற்றாண்டு தொடங்கியது.
நூற்றாண்டு நிறைவு விழா
நாவலர் இரா.நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழாவை அறிவு சார்ந்த தமிழ் உலகமும், திராவிட இயக்கத்தின் தொண்டர்களும் கொண்டாடி மகிழ்வோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இரா.நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் சிலை வைக்கப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழக அரசு சார்பில் சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் இரா.நெடுஞ்செழியனுக்கு மார்பளவு சிலை அமைக்கப்பட்டது.
மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
இதன் திறப்பு விழா சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இரா.நெடுஞ்செழியனின் சிலையை திறந்து வைத்தார். பின்னர், அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதன்பின்பு நடந்த நிகழ்ச்சியில் இரா.நெடுஞ்செழியனின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டதற்காக அரசின் சார்பில் நூலுரிமை தொகையை நெடுஞ்செழியனின் மகன் மதிவாணன், மருமகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் கல்யாணி மதிவாணன், பேரன் ஜீவன் நெடுஞ்செழியன், பேத்தி சொப்ணா மதிவாணன் ஆகியோரிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சிறப்பு மலர்
பின்னர், இரா.நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பு மலரை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக இரா.நெடுஞ்செழியனின் அரசியல், இலக்கிய பயணம் குறித்த முக்கிய நிகழ்வுகள் தொகுக்கப்பட்டு அகன்ற திரையில் ஒளிபரப்பப்பட்டது. அதனை மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், விழாவுக்கு வந்திருந்தவர்கள் கண்டு களித்தனர்.
இரா.நெடுஞ்செழியனின் சிலையை வடிவமைத்த சிற்பி தீனதயாளனுக்கு மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இரா.நெடுஞ்செழியனுக்கு சிலை அமைத்ததற்காக அவரது குடும்பத்தினர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து புத்தகங்களை பரிசாக வழங்கினர்.
ஆட்டோகிராப்
அந்த சமயத்தில் இரா.நெடுஞ்செழியனின் மகன், மருமகள் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது கல்யாணி மதிவாணன் ஒரு புத்தகத்தை கொடுத்து ஆட்டோகிராப் போட்டு தரும்படி மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், அவருக்கு அந்த புத்தகத்தில் ‘வாழ்க வளர்க' என எழுதி கையொப்பமிட்டு ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார்.
விழா முடிவில் அதனை நிருபர்களிடம் காண்பித்த கல்யாணி மதிவாணன், ‘எனது வாழ்நாளில் நான் யாரிடமும் ஆட்டோகிராப் பெற்றது இல்லை. முதல்முறையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆட்டோகிராப் வாங்கி உள்ளேன். இந்த நாள் எனது வாழ்நாளில் மறக்க முடியாத முக்கியமான நாள். மு.க.ஸ்டாலின் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது செயல்பாடுகளால் என்னை கவர்ந்து விட்டார். அவர் எனக்கு பிடித்த தலைவராகி விட்டார்' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, பி.கே.சேகர்பாபு மற்றும் இரா.நெடுஞ்செழியனின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story