புதுவை, காரைக்காலில் சுனாமி நினைவு தினம்


புதுவை, காரைக்காலில் சுனாமி நினைவு தினம்
x
தினத்தந்தி 26 Dec 2021 11:15 PM IST (Updated: 26 Dec 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

புதுவை, காரைக்காலில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

புதுவை, காரைக்காலில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சுனாமி நினைவு தினம்
புதுவை,     காரைக்கால் பகுதியில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப்பேரலையில் 500-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்தநிலையில் சுனாமியின் 17-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
புதுச்சேரி பா.ஜ.க. மீனவர் அணி சார்பில் புதுவை கடற்கரையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. உள்துறை அமைச்சர்   நமச்சிவாயம் கலந்துகொண்டு கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார். மேலும் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த மணல்       சிற்பத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் தலைமையிலும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அசோக் பாபு, ராமலிங்கம், நிர்வாகிகள் செல்வம், ரவிச்சந்திரன், சிறுபான்மையின பிரிவு தலைவர் விக்டர் விஜயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காரைக்கால்
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், காரைக்கால் சுனாமி நினைவு தூணில் அமைச்சர் சந்திரபிரியங்கா, மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் துறை இணை இயக்குனர் சுபாஷ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து காரைக்கால் நண்டலாறு பகுதியில் உள்ள சுனாமி நினைவிடத்திலும் அமைச்சர் அஞ்சலி செலுத்தினார்.
மலர் அஞ்சலி
தி.மு.க. சார்பில் காரைக்கால் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. நாஜிம், திருப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ. நாக.தியாகராஜன் உள்பட நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள், பல்வேறு அமைப்பினர் தனித்தனியாக சென்று கடற்கரை சுனாமி நினைவு தூணில் அஞ்சலி செலுத்தினர்.
காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சந்திரமோகன் தலைமையில் காங்கிரசார் கடற்கரை சுனாமி நினைவு தூணில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து என்.ஆர். காங்கிரஸ்,                    அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
காரைக்காலை அடுத்த திருபட்டினம் பட்டினச்சேரி கிராமத்தில் எம்.எல்.ஏ. நாக.தியாகராஜன் தலைமையில் மீனவர்கள் சுனாமி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர். காரைக்கால் நண்டலாறு பகுதியில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. திருமுருகன் மற்றும் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
வீராம்பட்டினம்
வீராம்பட்டினம் பைபர் படகு உரிமையாளர் சங்கம் சார்பில் கடற்கரையில் நினைவு சிலைக்கு மலர் வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர், அறங்காவலர் குழு தலைவர் பரமானந்தன், பைபர் படகு உரிமையாளர் சங்க தலைவர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
அதைத்தொடர்ந்து               அரியாங்குப்பம்  தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர், புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கட்சியின் சிறப்பு அழைப்பாளர் அய்யப்பன் மற்றும் இளைஞர்கள் சிலர் சுனாமி நினைவு சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
கிருமாம்பாக்கம், காலாப்பட்டு
கிருமாம்பாக்கம் பஸ் நிறுத்த பகுதியில் மீனவம் காப்போம் மக்கள் இயக்க நிர்வாகிகள், புதுக்குப்பம், பனித்திட்டு, நரம்பை ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட மீனவ கிராமங்களான கனக செட்டிகுளம், சின்ன காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு பிள்ளைச்சாவடி ஆகிய மீனவ கிராமங்களில் நடந்த நிகழ்ச்சியில் காலாப்பட்டு  எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் மலர்தூவி மரியாதை செய்தார்.

Next Story