குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் ராட்சத பாகங்கள் கிரேன் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு


குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் ராட்சத பாகங்கள் கிரேன் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு
x
தினத்தந்தி 27 Dec 2021 3:46 AM IST (Updated: 27 Dec 2021 3:46 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் ராட்சத பாகங்கள் கிரேன் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு

குன்னூர், 

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 8-ந் தேதி புறப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் வனப்பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பலியானார்கள். விபத்து குறித்து விமானப் படையும், தமிழக போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்கு விமானப் படையினர் கொண்டு சென்றுள்ளனர்.ஹெலிகாப்டரின் தீ பிடித்த பாகங்கள் வனப்பகுதியில் கிடந்ததால் அந்த பகுதி முழுவதும் ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுபாட்டில் உள்ளது. கடந்த 4 நாட்களாக சிறிய பாகங்கள் வெட்டியெடுக்கப்பட்டு மூட்டைகளாக கட்டி 2 லாரிகளில் சூலூர் விமான தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

எடை அதிகம் கொண்ட என்ஜின் மற்றும் வால் பகுதியை கொண்டு செல்ல சிக்கல் நிலவியது. இதனால் கடந்த 24-ந் தேதி விபத்து நடந்த பகுதியை ஹெலிகாப்டரிலிருந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். எடை அதிகமுள்ள ராட்சத பாகங்களை எவ்வாறு எடுத்து செல்வது என்று ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி ராட்சத பாகங்கள் கிரேன் மூலம் எடுத்து செல்ல திட்டமிடப்பட்டு பணி நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story