மண்டல பூஜை நிறைவு: கன்னியாகுமரியில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்..!


மண்டல பூஜை நிறைவு: கன்னியாகுமரியில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்..!
x
தினத்தந்தி 27 Dec 2021 11:18 AM IST (Updated: 27 Dec 2021 11:18 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு பெற்றதையொட்டி கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான அய்யப்பபக்தர்கள் குவிந்தனர். இதனால் கடும்போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

கன்னியாகுமரி,

41 நாட்கள் சிறப்பு பூஜையின் சிகர நிகழ்ச்சியாக நேற்று சபரிமலை கோவிலில் மண்டல பூஜை நடந்தது. இதனையொட்டி தங்க அங்கி அலங்காரத்தில் காட்சி அளித்த அய்யப்பசாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதனிடையே 3 மாத காலமும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் கன்னியாகுமரி வந்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். அதேபோல கடந்த நவம்பர் மாதம் 17-ந்தேதி முதல் கன்னியாகுமரிக்கு அய்யப்ப பக்தர்கள் வரத்தொடங்கினார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வந்த வண்ணமாக இருந்தனர். 

இந்த நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெரும்பாலான அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் வந்து குவிந்தனர். இதனால் கன்னியாகுமரியில் எங்கு பார்த்தாலும் கருப்பு மற்றும் நீல நிற உடைஅணிந்த பக்தர்களையே காண முடிந்தது. இதற்கிடையில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்துதொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் இந்த விடுமுறை நாட்களை குதுகலத்துடன் கொண்டாட சுற்றுலா தலங்களை நாடி மக்கள் குடும்பத்துடன் படையெடுத்து சென்ற வண்ணம் உள்ளனர். 

இதனால் உலகப் புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணமாக உள்ளனர். இதனால் கன்னியாகுமரியில் சீசன் மேலும் களை கட்டி உள்ளது. கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை சூரியன் உதயமாகும் காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் திரண்டதால் கடற்கரைப் பகுதி போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறியது. 

அதேபோல முக்கடல் சங்கமத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் கடலில் ஆனந்த குளியல் போட்டனர். பின்னர் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். இதனால் கோவிலில் இன்று அதிகாலையில் இருந்தே நீண்ட கியூவரிசை காணப்பட்டது. இதேபோல கன்னியாகுமரி விவேகானந்தாபுரம் கடற்கரையில்உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் பயணம் செய்து பார்வையிட்டு திரும்பினர். ஒரே நேரத்தில் ஏராளமான பஸ், கார்,வேன்,ஜூப் போன்ற வாகனங்களிலும் இரு சக்கர வாகனங்களிலும் சுற்றுலா பயணிகள் வந்து குவிந்ததால் கன்னியாகுமரியில் இன்று அதிகாலை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியதால் கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

Next Story