சிறார் தடுப்பூசி : ஜனவரி 1ஆம் தேதி முதல் முன்பதிவு தொடக்கம்
இந்தியாவில் 15-18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசிக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் CoWIN செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கோவின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்ட 33 லட்சம் சிறுவர்களுக்கு பள்ளிகளுக்கே நேரடியாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் ஒமைக்ரான் குறித்த அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. கொரோனாவை வெல்லும் பேராயுதமான தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2 தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்றுகூட 16-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.
இதற்கிடையே 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு ஜனவரி 3-ந்தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் அறிவித்தார். இதேபோல் ஜனவரி 10-ந்தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் மோடி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்தியாவில் 15-18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசிக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் கோவின் (CoWIN) செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கோவின் இயக்குநர் ஆர்.எஸ். சர்மா தெரிவித்துள்ளார்.
இதன்படி கொரோனா தடுப்பூசிக்கான கோவின் இணையதளத்தில் சென்று, 15 முதல் 18 வயது வரை உள்ளவர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்பதிவு செய்ய, ஆதார் அட்டை இல்லாதவர்கள், 10ஆம் வகுப்பு பள்ளி அடையாள அட்டையைக் காட்டி முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பு ஏற்பாடாக, கோவின் இணையதளத்தில், அடையாள அட்டைப் பட்டியலில் 10ஆம் வகுப்பு அடையாள அட்டை இணைக்கப்படும் என்று கோவின் இணையதளத்தின் தலைவர் டாக்டர் ஆர்.எஸ். ஷர்மா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story