தொழில் அதிபர் வீட்டில் 750 பவுன் நகைகள் கொள்ளை


தொழில் அதிபர் வீட்டில் 750 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 28 Dec 2021 1:49 AM IST (Updated: 28 Dec 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 750 பவுன் நகைகளை மர்ம நபர் கள் கொள்ளையடித்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீமிசல் பகுதியை அடுத்த கோபாலபட்டினம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஜகுபர் சாதிக் (வயது 55). தொழில் அதிபரான இவர் கடந்த 30 ஆண்டுகளாக புருனே நாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். அவருக்கு மகாதீர்முகமது (20), நஜீர்முகமது (12) ஆகிய 2 மகன்களும், ஜாஹிராபானு(15) என்ற ஒரு மகளும் உள்ளனர். அவர்களில் மகாதீர்முகமது, கோபாலபட்டினத்தில் உள்ள அவரது அத்தை சாதிக்காபீவி வீட்டில் வசித்து வருகிறார்.

கோபாலபட்டினத்தில் உள்ள ஜகுபர்சாதிக்கின் வீட்டை அவரது சகோதரி சாதிக்காபீவி குடும்பத்தினர் பராமரித்து வந்துள்ளனர். சாதிக்காபீவி, கடந்த 24-ந் தேதி ஜகுபர்சாதிக் வீட்டிற்கு சென்று வீட்டை சுத்தம் செய்து விட்டு, பின்னர் வீட்டை பூட்டிவிட்டு அவரது வீட்டிற்கு சென்று விட்டார்.

750 பவுன் நகைகள் கொள்ளை

இந்தநிலையில் நேற்று காலை 10½ மணியளவில் சாதிக்காபீவியின் மகள் உம்மல்ஹமீலா (35), ஜகுபர்சாதிக்கின் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் கதவு ஓரம் மிளகாய் பொடி பரவி கிடப்பதை பார்த்தார். உடனே அவர் இதுகுறித்து தனது தாய் சாதிக்காபீவிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதன்வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் உள் அறைகள் மற்றும் மேல்தளத்தில் உள்ள ஒரு அறையில் இருந்த பீரோ, அலமாரி மற்றும் பெட்டிகளை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 750 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றிருந்தது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த சாதிக்காபீவி, புருணையில் உள்ள ஜகுபர்சாதிக்கை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மீமிசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story