கோவை: நிதி நிறுவனம் நடத்தி ரூ.12½ லட்சம் மோசடி- 3 பேருக்கு 10 ஆண்டு சிறை
கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.12½ லட்சம் மோசடி செய்த 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் லக்குமநாயக்கன்பட்டியில் குபேரா ஆட்டோ பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது.
இந்த நிதி நிறுவனத்தை எஸ்.டி.சாமிநாதன், எஸ்.பி. முத்துவேல், மாணிக்கம், ராஜேந்திர குமார், லோகநாயகி, செல்வி உள்ளிட்டோர் நடத்தி வந்தனர். இவர்கள் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 24 சதவீதம் வட்டியாக அதிக லாபம் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை கூறி உள்ளனர்.
இதை நம்பி 20 முதலீட்டாளர்கள் ரூ.12 லட்சத்து 66 ஆயிரம் முதலீடு செய்து உள்ளனர். ஆனால் அறிவித்த தேதிகளில் அசல் மற்றும் வட்டியை திருப்பித் தராமல் முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட காங்கேயம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் (டான்பிட்) நடந்து வந்தது. இந்த வழக்கில் 25 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் எஸ்.டி.சாமிநாதன் எஸ்.பி. முத்துவேல், மாணிக்கம் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், ரூ.16 லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதி ரவி தீர்ப்பளித்தார்.
மேலும் ராஜேந்திர குமார், லோகநாயகி, செல்வி ஆகியோர் மீது குற்றம் புரிந்தமைக்கான முகாந்திரம் இல்லாத காரணத்தினால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story