புதுவையிலும் நுழைந்தது ஒமைக்ரான் கல்லூரி மாணவி உள்பட 2 பேருக்கு பாதிப்பு உறுதி


புதுவையிலும் நுழைந்தது ஒமைக்ரான்  கல்லூரி மாணவி உள்பட 2 பேருக்கு பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 28 Dec 2021 9:10 PM IST (Updated: 28 Dec 2021 9:10 PM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் கல்லூரி மாணவி உள்பட 2 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து புதுவையிலும் ஒமைக்ரான் நுழைந்தது.

புதுச்சேரி
புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் கல்லூரி மாணவி உள்பட 2 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து புதுவையிலும் ஒமைக்ரான் நுழைந்தது.
உலகையே ஒமைக்ரான் தொற்று மிரட்டி வருகிறது.

கட்டுக்குள் இருந்தது

புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வந்தது. இதையடுத்து பரிசோதனை எண்ணிக்கையும் குறைந்தது. இதனால் கடந்த சில வாரங்களாகவே தொற்று பாதிப்பு என்பது 10-குள்ளேயே கட்டுக்குள் இருந்து வந்தது.
இந்தநிலையில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டது. 

9 பேருக்கு கொரோனா

இதையொட்டி அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வந்து குவிந்துள்ள நிலையில் தொற்று பாதிப்பு தொடர்பான அறிக்கையை  மாநில சுகாதார துறை வெளியிட்டது.
அதாவது, நேற்று முன்தினம் புதுவையில் 2 ஆயிரத்து 265 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதுச்சேரியில் 2, காரைக்காலில் 4, மாகியில் 3 என 9 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 2 ஆயிரத்து 229 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 3 ஆயிரத்து 542 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 13 லட்சத்து 81 ஆயிரத்து 69 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஒமைக்ரான் 
2 பேருக்கு உறுதி

இதற்கிடையே புதுச்சேரி ராஜா தியேட்டர் பின்புறம் உருளையன் பேட்டையை சேர்ந்த 80 வயது முதியவர், லாஸ்பேட்டையை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஆகியோர் கடந்த 7-ந்தேதி கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
இருப்பினும் அவர்களது ரத்தம், சளி மாதிரி பெங்களூவில் உள்ள ஒமைக்ரான் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் இன்று கிடைத்தன. 
இதில், அவர்கள் இருவருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு எவ்வாறு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து மருத்துவ குழுவினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். 
அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார், யார்? என்பது பற்றிய விவரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளனர். அவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து சோதனை நடத்தவும் சுகாதார துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Next Story