மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடு...? லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
மதுரை ஆவின் நிறுவனத்தில் நடந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல பேரிடம் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு போலீசார் நவ.15-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடியானது. இதையடுத்து விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் 8 தனிப் படைகள் அமைத்து அவரைத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி இருந்த போது மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2 நாட்களாக மதுரை ஆவின் நிறுவனத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது கடந்த அதிமுக ஆட்சியின் போது திருப்பதி லட்டு தயாரிப்புக்கு நெய் அனுப்பியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு போலி ஆவணங்களை பயன்படுத்தி நெய் விநியோகம் செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மதுரை ஆவின் நிறுவன மேலாளர் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story