நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு - டிடிவி தினகரன் கண்டனம்


நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு - டிடிவி தினகரன் கண்டனம்
x
தினத்தந்தி 29 Dec 2021 11:49 AM IST (Updated: 29 Dec 2021 11:49 AM IST)
t-max-icont-min-icon

பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டோருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்ற உத்தரவை அரசு திரும்பப் பெற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் பொது நகைக்கடன் மற்றும் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்வது குறித்த அறிவுறுத்தல்களை கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட 48,84,726 லட்சம் நகைக்கடன்களில் 35,37,693 லட்சம் நகைக்கடன்கள் தள்ளுபடி கிடையாது என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதில் 2021 ஆம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நகைக்கடன் தொகை முழுமையாக செலுத்தியவர்கள், 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்ற குடும்பத்தினர், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பிற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் நகைக்கடன் தள்ளுபடியில் தி.மு.க அரசு மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படுவது கண்டனத்திற்குரியது. 

வாக்குறுதிகளை அள்ளி தெளித்து அதிகாரத்திற்கு வந்துவிட்டு, இப்போது அதிலிருந்து தப்பிக்க காரணங்களைத் தேடுவது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். எனவே, பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டோருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்ற புதிய உத்தரவை தி.மு.க அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story