மாரடைப்பு- இருதய நோய்கள் காரணிகள் மற்றும் தவிர்க்கும் முறைகள்- டாக்டர் அசோக்
மாரடைப்பு- இருதய நோய்கள் காரணிகள் மற்றும் தவிர்க்கும் முறைகள் குறித்து டாக்டர் அசோக் கூறியதாவது:-
சமீபகாலமாக இருதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்களே ஆகும்.
இதனால் 25 வயதிலேயே மாரடைப்பு அல்லது இருதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே மாரடைப்பு அல்லது இருதய நோய் பாதிப்பினை சில கட்டுப்பாடுகளை பின்பற்றுவதன் மூலம் வெகுவாக குறைக்கலாம். கடந்த இருப்பது ஆண்டுகளில் "ரெஜிஸ்டர் ஜெனரல் ஆப் இந்தியா" வின் புள்ளிவிவரப்படி மாரடைப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை (குறிப்பாக 30 முதல் 40 வயதுடையவர்கள்) மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
காரணிகள் மற்றும் தவிர்க்கும் வழிமுறைகள்:-
1.புகைபிடித்தல்(Smoking): புகைபிடிக்கும் பழக்கத்தினால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாகிறது. எனவே புகைத்தலை தவிர்ப்பது உங்கள் இருதயத்திற்கு நல்லது.
2.சர்க்கரை நோய்(Diabetes) : இதனால் இருதய நோய்/மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 2 முதல் 3 மடங்கு அதிகரிக்கிறது. எனவே 30 வயதை கடந்தவர்கள் மூன்று வருடத்திற்கு ஒருமுறை மற்றும் 40 வயதை கடந்தவர்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது இருதய நல பரிசோதனையை செய்துகொள்வது மூலம் சர்க்கரை நோய் உள்ளதா என்பதையும் அறிந்துகொள்ளலாம். அவ்வாறு சர்க்கரை நோய் இருப்பின் மருத்துவரின் பரிந்துரைத்தலின்படி உணவுக் கட்டுப்பாட்டினை கடைபிடிப்பது மற்றும் மருந்துகளை உட்கொள்வது மூலமாக கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
4.இரத்தக்கொதிப்பு(Blood Pressure): இது மாரடைப்பு, மூளை பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான ஒரு முக்கிய காரணமாகும். நாட்டின் மக்கள் தொகையில் 40 வயதுடையோர் 40 சதவிகிதத்திற்கு மேலும் 50 வயதுடையோர் 50 சதவிகிதத்திற்கு மேலும் இரத்தக்கொதிப்பினால் பாதிக்கப்படுள்ளனர். எனினும் இரத்தக்கொதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொள்வோர் 20 சதவிகிதத்தினரே ஆவர். இதனை மருத்துவரின் அறிவுறுத்தலின்படி உணவுப் பழக்கம் மற்றும் மற்றும் மருந்துகளை உட்கொள்வது மூலமாக கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
5.உடற்பருமன்(Over Weight): இருதய நோய்/மாரடைப்பிற்க்கு இது ஒரு முக்கிய காரணமாகும். நாட்டில் மூன்றில் இருவர் உடற்பருமன் உடையவர்கள் ஆவர். எனவே முறையான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டினை மேற்கொள்வதன் மூலம் கட்டுக்குள் வைக்கலாம்.
6.மன உளைச்சல் (stress): கடந்த 10 முதல் 15 வருடங்களில் மன உளைச்சலால் இருதய நோய்/மாரடைப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே மன உளைச்சலை தவிர்க்க குறைந்தது 7 மணி நேர முழுமையான உறக்கம், தேவையற்ற சிந்தனையை தவிர்த்தல், முறையான உடற் பயிற்சி, தியானம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.
மேற்கூறிய காரணிகளை தவிர்க்கும்/கட்டுக்குள் வைக்கும் அறிவுறுத்தல்களை கடைபிடிப்பதன் மூலம் நாம் இருதய நோய்/மாரடைப்பு பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
Related Tags :
Next Story