புதுக்கோட்டை: சிறுவன் படுகாயம் எதிரொலி; துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திற்கு கலெக்டர் தடை


புதுக்கோட்டை:  சிறுவன் படுகாயம் எதிரொலி; துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திற்கு கலெக்டர் தடை
x
தினத்தந்தி 30 Dec 2021 12:20 PM IST (Updated: 30 Dec 2021 12:58 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் சிறுவன் படுகாயம் எதிரொலியாக துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட கலெக்டர் தடை விதித்து உள்ளார்.



புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைந்து உள்ளது.  இந்த மையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு (சி.ஐ.எஸ்.எப்.) துப்பாக்கி சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், அந்த பகுதியில் தனது பாட்டி வீட்டுக்கு வந்த புகழேந்தி (வயது 11) என்ற சிறுவன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்துள்ளான்.  இந்த நிலையில், இன்று துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது தவறுதலாக சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த சிறுவனை புதுகோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  எனினும், உயர் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றுள்ளனர்.  அங்கு சிறுவனுக்கு உயர் சிகிச்சை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், துப்பாக்கி சுடும் மையம் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என கோரி நார்த்தாமலையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதனால், புதுக்கோட்டை - திருச்சி சாலையில் ஒரு மணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதுக்கோட்டை பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் செயல்படுவதற்கு தடை விதித்து கலெக்டர் கவிதா ராமு இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளார்.  துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் பாதுகாப்புடன் உள்ளதா? என ஆய்வு செய்யப்படும்.  அந்த மையம், துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு உகந்ததுதானா என்றும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.


Next Story