தனுஷ்கோடியில் ஆஸ்திரேலிய பிளமிங்கோ பறவைகள் சீசன் தொடங்கியது


தனுஷ்கோடியில் ஆஸ்திரேலிய பிளமிங்கோ பறவைகள் சீசன் தொடங்கியது
x
தினத்தந்தி 30 Dec 2021 1:16 PM IST (Updated: 30 Dec 2021 1:16 PM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி கோதண்டராமர் ேகாவில் கடல் பகுதியில் ஆஸ்திரேலிய பிளமிங்கோ பறவைகள் வந்து குவிந்துள்ளதால், இந்த பறவைகளுக்கான சீசன் தொடங்கி உள்ளது.

ராமேசுவரம்,

ஆஸ்திரேலிய பிளமிங்கோ பறவைகளின் புகலிடம் தனுஷ்கோடி என்றால் அது மிகையல்ல. தமிழில் சொல்ல வேண்டும் என்றால் ஆஸ்திரேலிய பூநாரைகள்.

டிசம்பர் மாதம் தொடங்கிவிட்டால் தன் தாய்நாடான ஆஸ்திரேலியாவில் இருந்து, ராமேசுவரம், தனுஷ்கோடியை நோக்கி கூட்டம், கூட்டமாக பறந்து வர தொடங்கிவிடுகின்றன.

டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலும் இனப்பெருக்கத்திற்காக அந்த பறவைகள் பெரும்பாலும் தஞ்சமடைவது தனுஷ்கோடி கடல் பகுதியில்தான்.

தனுஷ்கோடியில் இப்போது ஆஸ்திரேலிய பிளமிங்கோ பறவைகளின் சீசன் தொடங்கிவிட்டது. அங்கு கோதண்டராமர் கோவில் அருகே உள்ள கடல் பகுதிக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து ஏராளமான பிளமிங்கோ பறவைகள் வந்து குவிந்துள்ளன.

கோதண்டராமர் கோவில் மற்றும் ராமேசுவரம் கோவிலுக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் மிக நீண்ட தூரத்தில் ஏராளமான பிளமிங்கோ பறவைகள் அணிவகுத்து நீண்ட வரிசையில் ஒய்யாரமாக நின்று கடலில் உள்ள மீன், பூச்சிகளை வேட்டையாடுகின்றன.

இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தனுஷ்கோடி கடல் பகுதிக்கு வரும் ஆஸ்திரேலிய பிளமிங்கோ பறவையானது நீண்ட இளஞ்சிவப்பு கால்களையும், நீண்ட கழுத்தையும் உடையவை. உடல் வெள்ளை நிறம் கொண்டது. இந்த பூநாரை பறவைகளின் பண்பு மிக வித்தியாசமானதாகும். தலையை குப்புற கவிழ்த்து முழுவதும் நீருக்குள் விட்டு அல்லது அலகை மட்டும் நீரின் மேற்பரப்பில் அழுத்தி இரை தேடும். மற்ற பறவைகளுக்கு உள்ளது போல் அல்லாமல் இவற்றின் மேல் அலகு வெகுவாக அசையும் தன்மை உடையது.

பெரிய நாக்கினால் நீரை உறிஞ்சி பின்னர் வெளியேற்றும். அப்படி செய்யும் போது நீரில் உள்ள சிறிய உயிரினங்கள் அலகின் ஓரங்களில் உள்ள சீப்பு போன்ற அமைப்பினால் வடிகட்டப்பட்டு இரையாக்கப்படும். இதற்கு தகுந்தாற்போல் இவற்றின் கீழ் அலகு தடிமனாகவும், மேல் அலகு தட்டையாகவும் இருக்கும்.

ஆஸ்திரேலிய பிளமிங்கோ பறவைகளை பெரும்பாலும் தனியாக பார்க்க முடியாது. கூட்டமாகத்தான் பார்க்க முடியும். கடலில் உள்ள சிறிய வகை இறால், புழு, பூச்சிகள், நீர்த்தாவரங்கள் விதைகள் உள்ளிட்டவற்றை உணவாக உட்கொள்ளும். இந்த ஆண்டு தனுஷ்கோடி கடல் பகுதிக்கு தற்போதுதான் பறவைகள் வரத் தொடங்கியுள்ளன.

இன்னும் சீசன் முடிவடைய 4 மாதம் உள்ளதால் பிளமிங்கோ பறவைகள் வரத்து இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தனுஷ்கோடி கடல் பகுதியில் குவிந்துள்ள பிளமிங்கோ பறவைகளோடு கடல் புறாக்கள், உள்ளான் குருவிகள், நீர்காகம் உள்ளிட்ட பல வகையான பறவைகளும் அருகருகே நின்று இரை தேடி வருகின்றன. பிளமிங்கோ உள்ளிட்ட அனைத்து பறவைகளும் கோதண்டராமர் கோவில் கரையில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால், கடலுக்குள் நிற்பதால் சுற்றுலா பயணிகள் இந்த பறவைகளை பார்த்து ரசிக்க முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

ஆகவே தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் கடல் பகுதிக்கு வந்துள்ள பிளமிங்கோ பறவைகளை சுற்றுலா பயணிகள் அனைவரும் பார்த்து ரசித்து செல்லும் வகையில் சீசன் காலத்தில் மட்டுமாவது வனத்துறையின் சார்பிலோ, அல்லது சுற்றுலாத்துறையின் சார்பிலோ தொலைநோக்கி (டெலஸ்கோப்) வசதியை ஏற்படுத்தி, சுற்றுலா பயணிகள் பார்த்து செல்லும் வகையிலான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story