ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், உறவினர்களுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் - டாக்டர் ராதாகிருஷ்ணன் தகவல்
அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்படும் என டாக்டர் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தெரிவித்தனர்.
சென்னை,
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 75 படுக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த படுக்கைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ஜெயந்தி உடன் இருந்தார்.
இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
காய்ச்சல், தொண்டை கரகரப்பு உள்ளிட்ட கொரோனா அறிகுறி உள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் உள்ளன.
இதுவரை, ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு கண்டறியப்படவில்லை. ஆனாலும், வருமுன் காப்போம் என்பதை பின்பற்றி சென்னையில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், மார்க்கெட் பகுதிகளில் பரிசோதனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல்துறை அதிகாரிகளுடன் இன்று (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பின், கட்டுப்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் முடிவெடுத்து அறிவிப்பார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஒரு நோயாளியிடம் இருந்து பலருக்கு தொற்று பரவியது. இதுவரை 4 ஆயிரத்து 395 பேருக்கு பரிசோதனை செய்ததில் 128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதில் 93 பேருக்கு எஸ் ஜீன் குறைபாடு (ஒமைக்ரான் அறிகுறி) கண்டறியப்பட்டு உள்ளது. பொதுமக்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவதில் தன்னை தானே ஏமாற்றி கொள்ள வேண்டாம். ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகள் என எங்கு சாப்பிட்டாலும் சமூக இடைவெளி அவசியம் பின்பற்ற வேண்டும்.
ஒரு மரபணு பரிசோதனைக்கு ரூ.5 ஆயிரம் வரை தேவைப்படுகிறது. தற்போது பரவி வருவது என்ன மாதிரியான வகை தொற்று என்பது கண்டறியப்பட்டுள்ளது. அனைத்திற்கும் ஒரே மாதிரியான சிகிச்சைதான் வழங்கப்படுகிறது. எனவே, வருங்காலங்களில் மரபணு பகுப்பாய்வு செய்ய வேண்டியதாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறும்போது, ‘சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒருவரிடம் இருந்து 100 பேர் வரை தொற்று பரவுவதால் அறிகுறி உள்ளவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மேலும் தொற்று பாதித்தவர்கள் உறவினர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும். இதை தவிர ஆஸ்பத்திரிகள் தொற்று பரவும் இடமாக இருப்பதால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு கட்டாயம் பரிசோதனை செய்யப்படும்.
இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள், ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிட கூடாது. தேவையின்றி பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். அனைவரும் முககவசத்தை மூக்கு வரை அணிய வேண்டும். சென்னையில் தடுப்பூசி போடாமல் உள்ள 5 லட்சம் பேரும் ஞாயிற்றுக்கிழமை மெகா முகாமில், தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story