45-வது சென்னை புத்தக கண்காட்சி: மு.க.ஸ்டாலின் 6-ந்தேதி தொடங்கி வைக்கிறார்


45-வது சென்னை புத்தக கண்காட்சி: மு.க.ஸ்டாலின் 6-ந்தேதி தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 31 Dec 2021 3:19 AM IST (Updated: 31 Dec 2021 3:19 AM IST)
t-max-icont-min-icon

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45-வது புத்தக கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 6-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45-வது சென்னை புத்தக கண்காட்சி வருகிற 6-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த புத்தக கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 6-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

இதற்கான அழைப்பிதழை சென்னை தலைமை செயலகத்தில் பபாசியின் தலைவர் வயிரவன், செயலாளர் எஸ்.கே.முருகன், பொருளாளர் குமரன், துணைத்தலைவர் மயிலவேலன், இணைச் செயலாளர் எஸ்.பழனி, துணை இணை செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.

புத்தக கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதனைத் தொடர்ந்து எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் விருதுகள் வழங்க இருக்கிறார். அதன்படி, முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது 6 பேர் பெற இருக்கின்றனர். அவர்களின் விவரம் வருமாறு:-

உரைநடை - சமஸ்

நாடகம் - பிரசன்னா ராமசாமி

கவிதை - ஆசைத்தம்பி

புதினம் - அ.வெண்ணிலா

பிறமொழி - பால் சக்கரியா

ஆங்கிலம் - மீனா கந்தசாமி ஆகியோர் விருதுகளை பெற இருக்கின்றனர்.

இதேபோல், சிறந்த பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், குழந்தை எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளருக்கான விருதையும் மு.க.ஸ்டாலின் வழங்க இருக்கிறார். அந்தவகையில் அந்த விருதுகளை பெறுபவர்களின் விவரங்கள் வருமாறு:-

சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பக செம்மல் விருது - ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் (மணிவாசகர் பதிப்பகம்) ரவி தமிழ்வாணன்

சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்பு செம்மல் ச.மெய்யப்பன் விருது - நாதம் கீதம் புக் செல்லர்ஸ்

சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான கவிஞர் அழ.வள்ளியப்பா விருது - திருவை பாபு

சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது - தேவிரா

சிறந்த பெண் எழுத்தாளருக்கான பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது - பாரதி பாஸ்கர்

சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது - கு.வை.பாலசுப்பிரமணியன் ஆகியோர் பெறுகின்றனர்.

Next Story