சென்னை மேற்கு மாம்பலத்தில் 32 மின்மாற்றிகளில் வினியோகம் நிறுத்தம்
சென்னை தி.நகர், மேற்கு மாம்பலத்தில் மழைநீர் சூழ்ந்து காணப்படும் நிலையில், 32 மின்மாற்றிகளில் மின்வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை,
சென்னையில் நேற்று காலையில் திடீரென சாரல் மழை பெய்தது. இதன்பின்னர், தொடர் கனமழை பெய்தது. 10 மணிநேரத்திற்கும் கூடுதலாக மழை பெய்தது. இதன்படி, சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, அடையாறு, பெருங்குடி, சென்ட்ரல், பூந்தமல்லி, தி.நகர், சேத்துப்பட்டு, கோயம்பேடு, வளசரவாக்கம், மீனம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், சேப்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
சென்னை புறநகரிலும் மழை பெய்துள்ளது. இதுதவிர, கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது. திடீரென பெய்த கனமழையால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.
இதனால், பல இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்து காணப்படுகிறது. தேங்கியுள்ள மழைநீர் மோட்டார் கொண்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
இவற்றில், சென்னை தி.நகர், மேற்கு மாம்பலத்தில் பல்வேறு இடங்களிலும் மழைநீர் சூழ்ந்து உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 32 மின்மாற்றிகளில் மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. மழைநீர் தேங்கியிருப்பதன் அடிப்படையில் ஒரு மணிநேரத்தில் மின்வினியோகம் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story