கொட்டி தீர்த்த கனமழை ...! சென்னையில் வெள்ளத்தில் மிதந்த 145 இடங்கள் ; 4 சுரங்கப்பாதைகள் மூடல்


கொட்டி தீர்த்த கனமழை ...! சென்னையில் வெள்ளத்தில் மிதந்த 145 இடங்கள் ; 4 சுரங்கப்பாதைகள் மூடல்
x
தினத்தந்தி 31 Dec 2021 7:50 AM GMT (Updated: 31 Dec 2021 7:50 AM GMT)

சென்னையில் நேற்று மதியம் முதல் இரவு வரை சுமார் 10 மணிநேரம் விடாமல் கொடூரமாக மழை பெய்தது

சென்னை:

சென்னையில் நேற்று மதியம் முதல் இரவு வரை சுமார் 10 மணிநேரம் விடாமல் கொடூரமாக மழை பெய்தது.

பிற்பகல் 12 மணிக்கு மேல் எழும்பூர், தியாகராயநகர், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, பாரிமுனை, புரசைவாக்கம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், அம்பத்தூர் உள்பட பல்வேறு இடங்களில் காற்றுடன் மிதமான மழை பெய்தது.

அதன்பின்னர், பிற்பகல் 3 மணிக்கு மேல் சென்னையில் கிண்டி, தியாகராயநகர், எழும்பூர், அண்ணாசாலை, அமைந்தகரை, கே.கே.நகர், வடபழனி, புரசைவாக்கம் தானாதெரு, தேனாம்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து பெய்த இந்த கன மழையால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

குறிப்பாக சென்னை அண்ணாசாலை, ஜி.பி.சாலை, திருவல்லிக்கேணி வாலாஜா சாலை, சிந்தாதிரிப்பேட்டை, ராயப்பேட்டை, தியாகராயநகர் உள்பட முக்கிய பிரதான சாலைகளில் முட்டளவுக்கு மழைநீர் ஆறுபோல் ஓடியது. இதனால் அந்த பகுதிகளில் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றதையும், பாத சாரிகள் அந்த பகுதியை மிகவும் சிரமத்துடன் கடந்து சென்றதையும் பார்க்க முடிந்தது.

எதிர்பாராத இந்த மழை காரணமாக சென்னை நகர மக்கள் நேற்று இரவு கடும் அவதியை சந்திக்க நேரிட்டது. எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாததால் மக்களால் உடனடியாக பலத்த மழை பாதிப்பில் இருந்து தப்ப முடியாத நிலை உருவானது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடாமல் மழை பெய்ததால் முதல் 2 மணி நேரத்திலேயே தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பிற்பகல் 3 மணிக்கெல்லாம் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல பிரதான சாலைகள் குளம்போல மாறின.

இதன் காரணமாக நகரின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் ஆற்று வெள்ளம் போல ஓடத்தொடங்கியது. சுமார் 145 இடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கிவிட்டது போல மிதந்தன. கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் இந்த 145 இடங்கள் வெள்ளத்தில் மிதந்தது குறிப்பிடத்தக்கது.

பருவமழை இனி வராது என்ற அலட்சியம் காரணமாக யாருமே இந்த மழையை எதிர்பார்க்கவில்லை. கடந்த மாதம் மழை ஏற்படுத்திய சேதத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாத நிலையில் நேற்று பெய்த கொடூர மழை மீண்டும் பாடம் கற்றுக் கொடுப்பது போல் அமைந்துவிட்டது.

தாழ்வான பகுதிகளில் இருந்து தண்ணீரை உடனுக்குடன் அகற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டாலும், தொடர் மழை காரணமாக பாதிப்பை குறைக்க இயலவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டது.

10 மணிநேரம் நீடித்த மழை காரணமாக சென்னையின் அனைத்து பகுதிகளிலும் தாழ்வான இடங்களில் வீடுகளுக்குள்ளும், கடைகளுக்குள்ளும் மழை தண்ணீர் புகுந்தது. சுமார் 50 இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள் உதவி கேட்டு சென்னை மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டனர்.

நேற்று இரவு 8 மணிவரை தங்கள் பகுதியில் அதிகம் வெள்ளம் சூழ்ந்து இருப்பதாக 532 புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீரை அகற்றும் பணியை முடுக்கிவிட்டனர். 145 மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீரை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

தண்ணீரை அகற்றும் பணிகள் விடிய, விடிய நடந்தது. இதன் காரணமாக இன்று அதிகாலைதான் பெரும்பாலான சாலைகளில் இயல்பு நிலை திரும்பியதை காணமுடிந்தது. கடற்கரை பகுதிகளில் அதிக தண்ணீர் தேங்கி இருந்தது.

தி.நகர், திருமலைப் பிள்ளை சாலை, அபிபுல்லா ரோடு, ஆற்காடு ரோடு, பேப்பர் மில்ஸ் சாலை, ராஜமன்னார் சாலை, கலாசேத்ரா மெயின் ரோடு, எல்.பி.ரோடு, ஐந்து பர்லாங் ரோடு, கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றில் அதிக தண்ணீர் தேங்கி இருந்தது. விடிய, விடிய அதிகாரிகள் இங்கு முகாமிட்டு மழை தண்ணீரை அகற்றினார்கள்.



மழை தண்ணீர் சேதம் தொடர்பாக பொதுமக்கள் 1913 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறி இருந்தனர். பொதுமக்களின் புகார்களை எதிர் கொள்வதற்காக இந்த சேவையில் மேலும் 30 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் காரணமாக பல இடங்களில் புகார்கள் வந்தவுடன் பாதிப்புகளை மாநகராட்சி அதிகாரிகளால் சரி செய்ய முடிந்தது.

மேற்கு மாம்பலம், அசோக் நகர், ரங்கராஜபுரம், வடபழனி, உஸ்மான் சாலை, பசுல்லா சாலை ஆகிய பகுதிகளில் இருந்து அதிகளவு புகார்கள் வந்தன. அந்த இடங்களில் உள்ள தண்ணீர் உடனுக்குடன் அகற்றப்பட்டன.

சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அணைக்கட்டு உடைந்துவிட்டால் தண்ணீர் எப்படி சீறிப்பாய்ந்து போகுமோ அந்த மாதிரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் தண்ணீர் ஆற்றுவெள்ளமாக ஓடியது. ஈ.வி.கே.சம்பத் சாலையில் ஏற்பட்ட தண்ணீர் பெருக்கால் வாகனங்கள் சுமூகமாக செல்ல முடியாமல் தத்தளித்தன.

மற்ற பகுதிகளில் இருந்து திருப்பிவிடப்பட்ட தண்ணீர் ஈ.வி.கே.சம்பத் சாலையில் குவிந்துவிட்டதால் இதுவரை இல்லாத அளவுக்கு மழை தண்ணீர் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த பகுதியில் வாகன போக்குவரத்தை போலீசார் தடை செய்ததால் மக்களால் எளிதில் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மழை ஒரு பக்கம், வாகன நெருக்கடி ஒரு பக்கம், ஆங்காங்கே சாலைகளில் ஏற்படுத்தப்பட்ட தடைகள் மற்றொரு பக்கம் என்று மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இன்று காலைதான் அந்த பகுதிகளில் சற்று இயல்பு நிலை திரும்பியுள்ளது.

பெரும்பாலான பிரதான சாலைகளில் தண்ணீர் அகற்றப்பட்டுவிட்டது. வீடுகளில் புகுந்த தண்ணீரும் இன்று காலை வடிந்தோடியது. சில பகுதிகளில் மட்டும் இன்று மதியம் வரை தண்ணீர் தேங்கி இருந்தது. அந்த இடங்களில் இருந்தும் தண்ணீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Next Story