அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவுக்காக பொது சேவை மையங்களில் அலைமோதிய கூட்டம்


அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவுக்காக பொது சேவை மையங்களில் அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 31 Dec 2021 7:59 PM IST (Updated: 31 Dec 2021 7:59 PM IST)
t-max-icont-min-icon

அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவுக்காக பொது சேவை மையங்களில் கூட்டம் அலைமோதியது.

பாகூர்
அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவுக்காக பொது சேவை மையங்களில் கூட்டம் அலைமோதியது.

இ-ஷரம்

அமைப்பு சாரா தொழிலாளர்களை முறையாக கண்டறியும் வகையில், மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மூலம் இ-ஷரம் என்ற புதிய வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, புதுச்சேரியில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக புதுச்சேரியில் 11 இடங்களில் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதுதவிர அனைத்து பொது சேவை மையங்களிலும் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொழிலாளர்கள் குவிந்தனர்

இந்தநிலையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவுக்கு    இன்று கடைசி நாள் என   தகவல்   பரவியது.  இதனால் பாகூர், கன்னியக்கோவில் பகுதிகளில் பொது சேவை மையங்களில் தங்களின் விவரங்களை பதிவு செய்ய தொழிலாளர்கள் குவிந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் தொழிலாளர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் ஆதார் பதிவு, வருவாய்த்துறை சான்றிதழ் விண்ணப்பம் செய்தல், வேளாண் பயிர் காப்பீடு பதிவு போன்ற பணிகள் பாதிக்கப்பட்டது. பொது சேவை மையங்களில் கூட்டம் கூடுவதை தடுக்க அமைப்பு சாரா      தொழிலாளர்கள் பதிவுக்கான காலக்கெடு குறித்து      அதிகாரிகள் தெளிவுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

31-ந்தேதி வரை நீட்டிப்பு

இந்தநிலையில் ஈ-ஷரம் வலைத்தளத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுவை தொழிலாளர் துறை துணை ஆணையரும், அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்க உறுப்பினர் செயலருமான மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 அமைப்பு சாரா தொழிலாளர்கள் இ-ஷரம் வலைத்தளத்தில் பதிவு செய்வதற்காக வருகிற 31-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பதிவிற்கான சிறப்பு முகாம்கள் புதுச்சேரியின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அமைப்புசாரா தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று சிறப்பு பதிவு முகாம்களை நடத்த தொழிலாளர் துறை  அனைத்து  ஏற்பாடு களையும் செய்து வருகிறது.
இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற 16 வயது முதல் 59 வயதுக்குள் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் பதிவு செய்ய ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், கைபேசி எண் ஆகியவை கட்டாயம். மேலும் வருமான வரி செலுத்துபவர் மற்றும் பி.எப்., இ.எஸ்.ஐ. திட்டத்தில் உள்ள பணியாளர் இத்திட்டத்தில் இணைய முடியாது. பதிவு முற்றிலும் இலவசமாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story