மாமியாரை கத்தியால் குத்தி கொன்று எரித்த மருமகள்


மாமியாரை கத்தியால் குத்தி கொன்று எரித்த மருமகள்
x
தினத்தந்தி 31 Dec 2021 8:37 PM GMT (Updated: 31 Dec 2021 8:37 PM GMT)

மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்து எரித்த மருமகளை போலீசார் கைது செய்தனர். கியாஸ் கசிந்து தீ விபத்தில் அவர் இறந்ததாக நாடகமாடியது அம்பலமானது.

திருச்சி,

திருச்சி தாராநல்லூர் விஸ்வாஸ்நகர் 8-வது குறுக்கு மெயின்ரோட்டை சேர்ந்தவர் இப்ராம்கான். இவருடைய மனைவி நவீன் (வயது 46). இவருடைய மகன் ஆசிம்கான் (28). ஆசிம்கான் சென்னையில் கல்லூரியில் படித்தபோது, ரேஷ்மா (26) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2½ வயதில் மகன் உள்ளான். ஆசிம்கானைவிட ரேஷ்மா குடும்பத்தினர் சற்று வசதி குறைவானவர்கள்.

அடிக்கடி தகராறு

இந்தநிலையில் ரேஷ்மாவை ஆசிம்கான் திருமணம் செய்து கொண்டது மாமியார் நவீனுக்கு பிடிக்கவில்லையாம். இதன் காரணமாக அவர், மருமகள் ரேஷ்மாவுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் ரேஷ்மா மனக்குமுறலில் தவித்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ஆசிம்கான் ஒரு நிகழ்ச்சிக்காக வெளியே சென்றுள்ளார். வீட்டில் நவீன் சமைத்து கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென தவறி கீழே விழுந்தார்.

கத்தியால் குத்திக்கொலை

இதில் அவருக்கு தலையில் அடிபட்டது. உடனே தன்னை தூக்கிவிடும்படி ரேஷ்மாவிடம் நவீன் கூறிஉள்ளார். ஆனால் மாமியார் மீது ஆத்திரத்தில் இருந்த ரேஷ்மா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை எழுந்திருக்க விடாமல் அருகே இருந்த சிறிய கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்து நவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே ரேஷ்மா மாமியார் நவீனின் உடையில் தீ வைத்து அவரது உடலை எரித்தார்.

சிறிதுநேரத்தில் நிகழ்ச்சிக்கு சென்று இருந்த ஆசிம்கான் வீடு திரும்பினார். அப்போது கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டு நவீன் உடல் கருகி இறந்ததாக கூறி ரேஷ்மா கண்ணீர்விட்டு அழுது நாடகமாடி யுள்ளார். சம்பவம் தொடர்பாக காந்திமார்க்கெட் போலீசார் நவீன் விபத்தில் இறந்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.

நாடகமாடியது அம்பலம்

ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் நவீனின் உடலில் 14 இடங்களில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ரேஷ்மாவை பிடித்து துருவி, துருவி விசாரித்தனர். இதில் அவர் தான் மாமியார் நவீனை கொலை செய்தார் என்பதும், இது வெளியே தெரியாமல் இருக்க கியாஸ் கசிந்து அவர் தீ விபத்தில் இறந்ததாக நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்த போலீசார் ரேஷ்மாவை கைது செய்தனர்.

Related Tags :
Next Story