மு.க.ஸ்டாலின், தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து


மு.க.ஸ்டாலின், தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து
x
தினத்தந்தி 31 Dec 2021 10:55 PM GMT (Updated: 31 Dec 2021 10:55 PM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

இனிமை சூழ்ந்து - இன்னல் அகன்று, அனைத்து மக்களும் நலமும் வளமும் பெற்றிட நம்பிக்கையுடன் பிறக்கிறது 2022 ஆங்கிலப் புத்தாண்டு.

கடந்த 2 ஆண்டுகளாக உலகம் கண்டுவரும் பேரிடர் சூழல், மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக அமைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்து, மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்படும் நமது அரசு, எதிர்வரும் புத்தாண்டில் இன்னும் கூடுதலான செயலாற்றலுடன் மக்கள் நலனுக்கான பணிகளைத் தொடர்ந்திட உறுதிபூண்டுள்ளது.

புதுப்பொலிவு பெறும்

நமது அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையினை நிறைவேற்றும் வகையில் நிர்வாகச் செயல்பாடுகள் புத்தாண்டில் புதுப்பொலிவு பெறும்.

‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ எனும் மானுடத் தத்துவம் பாடிய பெருமைக்குரிய நமது தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் செழித்திடவும், உலகில் வாழும் மக்கள் யாவரும் பேரிடரைக் கடந்து நலன் பெற்றிடவும் விழைகிறேன். நமது அரசுக்கு உறுதுணையாக விளங்கிடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நேரில் வருவதை தவிர்க்கவும்

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் 6-வது முறையாகத் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வருகிற முதல் ஆங்கிலப் புத்தாண்டான 2022 ஜனவரி 1-ந் தேதியில், அந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த எண்ணத்தை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

எனினும், கொரோனா நோய்த் தொற்றின் புதிய வடிவான ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் உங்களின் முதல்-அமைச்சரான நானும், அந்த கடமையை உணர்ந்தவர்களாக கட்சியின் தொண்டர்களாகிய நீங்களும் இருப்பதால், உங்களின் மனப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு, புத்தாண்டு நாளான ஜனவரி 1-ந் தேதி என்னைச் சந்திப்பதற்காக நேரில் வருவதை கண்டிப்பாக முற்றிலும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல் ஆங்கிலப் புத்தாண்டு இது என்றாலும், இனி வரும் காலங்களும் தி.மு.க.வின் புத்தாண்டுகளாகவே இருக்கும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் தொண்டர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, பாதுகாப்புடன் இருக்குமாறு வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.மக்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை பெற்றிடவும், உலக மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்திடவும், மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நல்லாசியோடு எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து, அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழகத்தை அவல நிலைகளில் இருந்து காப்பாற்றுகிற பொறுப்பும், கடமையும் எண்ணற்ற வெற்றிகளை குவித்து வருகிற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இருக்கிறது. அதனை நிறைவேற்றுகிற வகையில் 2024 பொதுத் தேர்தலில் மத்திய பா.ஜ.க. அரசை அகற்றுவதற்கு வருகிற புத்தாண்டு ஒரு தொடக்கமாக அமையட்டும். அனைவருக்கும் மனப்பூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்து உள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், “தமிழ்நாட்டிற்கு நன்மை நடக்க வேண்டும்; தமிழ்நாடு இதுவரை அனுபவித்த தீமைகள் அனைத்தும் விலக வேண்டும்; வளர்ச்சியும், அதனால் மக்கள் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியும் மட்டும் தான் இனிமேல் தமிழ்நாட்டின் அடையாளங்களாக இருக்க வேண்டும் என்று கூறி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “கொரோனா, ஒமைக்ரான் உள்ளிட்ட நோய்களின் பிடியில் இருந்து மக்கள் முழுமையாக விடுபட்டு, ஆரோக்கியம் பெறவும் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றி பெறவும், சாதி, சமய மோதல்கள் இல்லாத சமத்துவமும், சகோதரத்துவமும், சமூகநீதியும் தமிழகத்தில் நிலைநிறுத்தப்படும் வகையிலும் இந்த புத்தாண்டு அமைய அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.

தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு இணையாக எந்த நோய்களும் அண்டாமல் மக்கள் அனைவரும் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று சிறப்போடு வாழ இந்த ஆங்கில புத்தாண்டு அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.

கி.வீரமணி

இதே போன்று, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு மாநிலப் பொதுச் செயலாளர் ரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், வி.விஜய் வசந்த், பெரம்பலூர் தொகுதி எம்.பி. பாரிவேந்தர், பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி தலைவர் முத்துரமேஷ் நாடார், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப், தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் சம்சுதீன், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர், மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ், வி.ஜி.பி. குழும தலைவர் வி.ஜி.சந்தோசம், இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைவர் பால் தினகரன், ம.பொ.சி. அறக்கட்டளை தலைவர் பா.செந்தில் ம.பொ.சி., முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், ஜம்மியத் உலமா ஹிந்த் அமைப்பின் மாநில செயலாளர் நிஜாமுதீன், தமிழ்நாடு நாடார் சங்க பொதுச்செயலாளர் ரவி, தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.விஜயகுமார் உள்ளிட்டோரும் புத்தாண்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர். கவிஞர் வைரமுத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story