மத்திய அரசு நிதியுதவியுடன் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் கோரிக்கை


மத்திய அரசு நிதியுதவியுடன் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 2 Jan 2022 11:08 PM GMT (Updated: 2 Jan 2022 11:08 PM GMT)

ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மத்திய அரசு நிதியுதவியுடன் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பதற்காக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 157 புதிய மருத்துவக் கல்லூரிகளில் கணிசமானவை இன்னும் அமைக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

புதிதாக அறிவிக்கப்பட்ட 157 கல்லூரிகளில் 63 மருத்துவக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டின் 11 கல்லூரிகள் உட்பட 39 மருத்துவக் கல்லூரிகள் விரைவில் திறக்கப்படவுள்ளன. மீதமுள்ள 55 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதில் முன்னேற்றம் இல்லை என்று கூறப்படுகிறது. அவற்றை அமைப்பதற்கான நிதியை பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு ஒதுக்கிய போதிலும், நிலம் இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் அவை அமைக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் காஞ்சீபுரம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இதுவரை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படவில்லை. இவற்றில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இல்லை என்பதால் அவற்றில் மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அனுமதி கோரலாம். இதுகுறித்து மத்திய அரசுடன் தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும்.

விருதுநகரில் வரும் 12-ந்தேதி நடைபெறவுள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவில், பிரதமர் நரேந்திரமோடியால் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படுவதை உறுதிசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story