தமிழக சட்டசபை கூட்டம்; எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை


தமிழக சட்டசபை கூட்டம்; எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 3 Jan 2022 12:40 AM GMT (Updated: 3 Jan 2022 12:40 AM GMT)

தமிழக சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.



சென்னை,

தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 5ந்தேதி நடக்கிறது. இதில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், அவை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில், கவர்னர் உரையாற்றுவது மரபு. அந்த வகையில், 2022ம் ஆண்டுக்கான அவையின் முதல் கூட்டம் வருகிற ஜனவரி 5ந்தேதி தொடங்குகிறது.

இந்த கூட்டம் மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை வளாகத்தில் நடைபெறும் என்று முன்பே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மீண்டும் சில தளர்வுகள் குறைக்கப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள இருக்கைகளில் சமூக இடைவெளி விட்டு அமைப்பது சிரமம் என்பதால், இந்தாண்டும் அவை கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அவை நிகழ்ச்சிகளை சேகரிக்கும் பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள், சட்டசபை ஊழியர்கள் அனைவரும் கட்டாய பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

கொரோனா பரிசோதனை மேற்கொண்டு சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அனைத்து எம்.எல்.ஏ.க்களும் அவரவர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அது மட்டுமல்லாமல் பத்திரிகையாளர்கள், அவை ஊழியர்களுக்கு சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் இன்றும் பரிசோதனை செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




Next Story