தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு


தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 3 Jan 2022 10:18 PM GMT (Updated: 3 Jan 2022 10:18 PM GMT)

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.

சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சென்னையிலும், திண்டுக்கல்லிலும் நேற்றிரவு துப்பாக்கிகளை கொண்டு நடத்தப்பட்ட கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரம் தலைதூக்குவது தமிழகத்தின் அமைதியையும், வளர்ச்சியையும் சீர்குலைத்துவிடும்; அந்த முயற்சிகளை அரசு முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.

தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கிகள் தாராளமாக கிடைக்கின்றன என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் குளங்களின் மீன்பிடி உரிமையை எடுப்பதில் குழு மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. அந்த மோதல்கள் இப்போது துப்பாக்கிச்சூடு நடத்தி எதிரிகளை கொல்லும் அளவுக்கு கொடூரமாகியிருப்பது மிகவும் ஆபத்தான போக்கு ஆகும். இது ஒடுக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே கள்ளத்துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது என்பதை காவல்துறையின் புள்ளி விவரங்களில் இருந்து அறியலாம். துப்பாக்கி கலாசாரத்திற்கு உடனடியாக முடிவு கட்டாவிட்டால், சிறிய குற்றங்களுக்குகூட கள்ளத்துப்பாக்கியை பயன்படுத்தும்நிலை உருவாகிவிடும்.

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரத்தை முளையிலேயே கிள்ளி எறிவதற்கான உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story