சென்னையில் தனியார் கண் ஆஸ்பத்திரி வங்கிக்கணக்கில் ரூ.24 லட்சம் நூதன மோசடி


சென்னையில் தனியார் கண் ஆஸ்பத்திரி வங்கிக்கணக்கில் ரூ.24 லட்சம் நூதன மோசடி
x
தினத்தந்தி 3 Jan 2022 11:22 PM GMT (Updated: 3 Jan 2022 11:22 PM GMT)

சென்னையில் தனியார் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.24 லட்சம் பணத்தை நூதன முறையில் அபகரித்த வழக்கில் வடமாநிலங்களை சேர்ந்த 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டையில் செயல்படும் உதி தனியார் கண் ஆஸ்பத்திரி நிர்வாக அதிகாரி டாக்டர் ரவீந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் அவர், “எங்கள் ஆஸ்பத்திரியின் வங்கிக்கணக்கில் இருந்து நூதனமான முறையில் ரூ.24 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. எங்கள் மருத்துவமனை வங்கிக்கணக்கோடு இணைக்கப்பட்ட செல்போன் எண்ணின் சேவை துண்டிக்கப்பட்டு, அதே செல்போன் எண்ணில், புதிய சிம் கார்டு வாங்கப்பட்டு, அந்த சிம்கார்டு செல்போன் எண் மூலம் எங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் அபகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

4 பேர் கைது

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு, கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் நாகஜோதி, உதவி கமிஷனர் வேல்முருகன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வினோத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் மேற்குவங்காளம் மற்றும் பீகாரை சேர்ந்தவர்கள் இந்த நூதன பண மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து தனிப்படை போலீசார் மேற்கு வங்காளம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சென்று மோசடியில் தொடர்புடைய 4 பேரை கைது செய்தனர். அவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சயந்தன் முகர்ஜி (வயது 25), ராகுல்ராய் (24), ரோகன்அலிசானா (27) மற்றும் பீகாரை சேர்ந்த ராகேஷ்குமார் சிங் (33) ஆவர்.

இவர்களிடம் இருந்து 14 செல்போன்கள், 105 சிம்கார்டுகள், 154 வங்கி ஏ.டி.எம். கார்டுகள், 22 போலி பான் கார்டுகள், 128 ஆதார் அட்டைகள் கைப்பற்றப்பட்டது. இவர்கள் 4 பேரும் நேற்று சென்னை அழைத்து வரப்பட்டனர்.

கமிஷனர் பேட்டி

இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

முதல்முறையாக இதுபோன்ற மோசடி நிகழ்வு நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட கண் ஆஸ்பத்திரி பெயரில் போலியான அடையாள அட்டைகளை சமர்ப்பித்து, இ-சிம்கார்டுகள் பெறப்பட்டு, உ.பி.மாநிலத்தில் ஆக்டிவேட் செய்து, மேற்கு வங்க மாநிலத்தில் 16 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு மேற்படி பணம் அனுப்பப்பட்டு மோசடி நடந்துள்ளது. சிம் கார்டுகள் வாங்கிய சதீஷ் என்ற முக்கிய குற்றவாளி இன்னும் பிடிபடவில்லை. அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வெகுமதி வழங்கி, பாராட்டு

இதனிடையே மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய 48 போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி, பாராட்டு தெரிவித்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த ஆண்டு 478 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 571 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 58 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த குற்றவழக்குகளிலும், ரூ.154 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. நில அபகரிப்பு வழக்குகளில் ரூ.127.63 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது.

Next Story