சென்னை, புறநகரில் மழை வெள்ளத்திற்கு நிரந்தர தீர்வு: வெள்ள இடர் தணிப்பு மேலாண்மைக்குழு இடைக்கால அறிக்கை


சென்னை, புறநகரில் மழை வெள்ளத்திற்கு நிரந்தர தீர்வு: வெள்ள இடர் தணிப்பு மேலாண்மைக்குழு இடைக்கால அறிக்கை
x
தினத்தந்தி 3 Jan 2022 11:43 PM GMT (Updated: 2022-01-04T05:13:45+05:30)

சென்னை, புறநகரில் மழை வெள்ளத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவது தொடர்பாக இடைக்கால அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வெள்ள இடர் தணிப்பு மேலாண்மைக் குழு தாக்கல் செய்தனர்.

சென்னை,

பெருமழை காலங்களின் போதெல்லாம் சென்னையும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளும் வெள்ளக்காடாகிப் போவது வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில் இயல்புக்கும் அதிகமாக பெய்த வடகிழக்கு பருவமழையின் போதும் பாதிப்பு கடுமையாக இருந்தது. இதனால் மக்களின் போக்குவரத்தும் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகள் குண்டும் குழியுமாக மாறி வாகன போக்குவரத்தில் தொய்வை ஏற்படுத்தின.

எனவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மைக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், வெள்ளநீர் வடிகால்களை வடிவமைக்கவும், சுற்றுச்சூழல், நகர திட்டமிடல் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளின் வல்லுநர்களை உள்ளடக்கி இந்தக் குழு உருவாக்கப்பட்டது.

பல கட்ட ஆய்வு

அந்தப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று இந்தக் குழுவிற்கு தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி, சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், வெள்ள கட்டுப்பாடு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் கால்வாய்களை வடிவமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக சுற்றுச்சூழல், நகர்ப்புற திட்டமிடல் போன்ற அம்சங்கள் குறித்து பல்வேறு கட்ட ஆய்வு நடத்தி, இந்தக் குழு இடைக்கால அறிக்கை ஒன்றை தயார் செய்தது.

இடைக்கால அறிக்கை

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, குழுவின் தலைவர் திருப்புகழ் மற்றும் உறுப்பினர்கள், அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது இடைக்கால அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திருப்புகழ் வழங்கினார். இடைக்கால அறிக்கை 90 பக்கங்களைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இன்னும் 3 மாதங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

பரிந்துரைகள்

சென்னையில் மழைநீர் தேங்கும் 561 இடங்கள் முதற்கட்டமாக கண்டறிந்து அங்கு முதல் கட்டமாக பணிகள் தொடங்கப்பட வேண்டுமென அறிக்கை பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், புறநகர் பகுதிகளில் வடிகால்களில் அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மழைநீர் வடிகால்கள் அகலப்படுத்த படுவதுடன் ஆழப்படுத்த வேண்டும். தரமான கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும்.

வடிகால் கட்டுமானங்கள் நடைபெற்ற பிறகு அதில் மாற்று வேலைகள் செய்யக்கூடாது. வீடுகளில் மழைநீர் கட்டமைப்புகள் செய்யப்பட வேண்டும். மழை நீர் சேகரிப்பு கட்டாயம் பயன்படுத்தப்பட வேண்டும். இதை மக்கள் இயக்கமாகக் கொண்டு செல்ல வேண்டும். மழைநீர் வடிகால்கள் அமைக்க போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

சென்னையில் ஓடும் அடையாறு, கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு உள்ளிட்டவற்றில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்-அமைச்சரிடம் குழுவினர் பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் மூலம் சில வடிகால்கள் அமைப்பு பற்றி விளக்கம் அளித்தனர்.

Next Story