நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்


நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 4 Jan 2022 12:28 AM GMT (Updated: 4 Jan 2022 12:28 AM GMT)

ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதில் ஒரே நாளில் 40 லட்சம் பேர் செலுத்தி சாதனை படைத்துள்ளனர்.

சென்னை,

ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்தி உள்ளது.

சிறுவர்களுக்கு தடுப்பூசி

இதற்கிடையே 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் ஜனவரி 3-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் (டிசம்பர்) 25-ந்தேதி அறிவித்தார். மேலும் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வருகிற 10-ந்தேதி செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

நாடு முழுவதும் சுமார் 7 கோடிக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளது.

இதனையடுத்து சிறுவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ‘கோவின்’ செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது. நேற்று இரவு 8 மணி வரை இந்த செயலியில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.

மாணவர்கள் ஆர்வம்

இதனைத்தொடர்ந்து சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும்பணி நேற்று நாடு முழுவதும் தொடங்கியது. அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் முகாம்களை தொடங்கி வைத்தனா். பள்ளிக்கூடங்களிலும், ஆஸ்பத்திரிகளிலும் நடந்த முகாம்களில் மாணவ, மாணவிகள் நீண்டவரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போடுவதை செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சில பள்ளிகளில் பெற்றோர் கண்காணிப்பில் தடுப்பூசி போடப்பட்டது. ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டதை அனைத்து தரப்பு பெற்றோரும் வரவேற்று உள்ளனர்.

சுகாதாரத்துறை மந்திரி ஆய்வு

தலைநகர் டெல்லியில் உள்ள ராம்மனோகர் லோகியா ஆஸ்பத்திரியில் நடந்த சிறுவர்களுக்கான தடுப்பூசி முகாமை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேரில் பாா்வையிட்டார்.

பின்னர் அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘தடுப்பூசி செலுத்திய சிறுவர், சிறுமிகள் தங்களது நண்பர்களையும் போட்டுக்கொள்ளுமாறு ஊக்கப்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழகத்திலும் 15 முதல் 18 வயது வரையிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பகுதியில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மிரட்டும் ‘ஒமைக்ரான்’ தொற்று

கொரோனா 2-ம் அலையை அரசு தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளை கையாண்டு, அதனுடைய வீரியத்தை குறைத்து, மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பையும் குறைத்தது. இதனால் மக்களுடைய வாழ்வாதாரம் ஓரளவுக்கு பாதுகாக்கப்பட்டு வந்தது. மாநிலத்தின் பொருளாதாரமும் மீட்சிப்பாதையில் மீண்டும் நடைபோட தொடங்கியது. ஆகவே, ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த நேரத்தில் இப்போது ‘ஒமைக்ரான்’ என்ற புதிய தொற்று நோய் புதிய அச்சுறுத்தலோடு நம்மை மிரட்ட தொடங்கி இருக்கிறது.

‘ஒமைக்ரான்’ தொற்றின் தாக்கம் அதிகரித்த காரணத்தால் வெற்றியை நோக்கி போய்க்கொண்டிருந்த நமது பயணம், மீட்சி பணியில் இருந்து மீண்டு போய்க்கொண்டிருந்த அந்த பயணத்திற்கு சிறிது தடை ஏற்படும் சூழ்நிலை இப்போது வந்திருக்கிறது.

தடுப்பூசி அவசியம்

முந்தைய கொரோனா வைரசை விட பல மடங்கு வேகமாக பரவக்கூடியது, இந்த ‘ஒமைக்ரான்’ தொற்று. அதனால்தான், இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், இதில் பரவல் வேகம் அதிகம். நோயின் தாக்கம் தமிழகத்தில் நிச்சயமாக அதிகரிக்கக்கூடும். ஆனால், இதை தடுப்பதற்காக நமக்கு முன்னால் இருக்கக்கூடிய முக்கியமான கேடயம், முககவசம்தான்.

அனைவரும் கட்டாயம் முககவசத்தை அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடித்தாக வேண்டும். ‘ஒமைக்ரான்’ வைரஸ் உருமாறி இருந்தாலும், நம் நாட்டில் செலுத்தப்படும் தடுப்பூசிகள் நல்ல நோய் தடுப்பை தொடர்ந்து அளித்து வருகிறது. தடுப்பூசியால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியால் புதிய வைரஸ் தாக்கினால் கூட, அந்த நோயின் தாக்கம் குறைவாகத்தான் இருக்கும். அதோடு, தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் இறப்பு விகிதமும் மிக மிக குறைவு என்பதைத்தான் டாக்டர்கள் கூறி வருகிறார்கள். ஆகவே, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும், உயிர் காக்கும் தடுப்பூசியை ஒவ்வொருவரும் போட்டுக்கொள்ள வேண்டும்.

உங்கள் வீட்டுப்பிள்ளையாக

60 வயதுக்கு மேற்பட்டவர்களில், இன்னும் 2 டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொள்ளாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அன்புடன், பணிவோடு, உரிமையோடு, உங்கள் வீட்டுப்பிள்ளையாக, உங்களில் ஒருவனாக கெஞ்சி, மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

முதல்-அமைச்சர் என்கிற முறையில் மட்டுமின்றி, உங்களின் குடும்பத்தில் ஒருவராக இருந்து உங்களை அன்போடு மீண்டும், மீண்டும் நான் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். தடுப்பூசி போட்டுக்கொள்வோம், புதிய வைரஸ் தாக்கத்தை தடுத்து நிறுத்துவோம் என்ற உறுதியை நீங்கள் இந்த நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ள வேண்டும். வரக்கூடிய காலக்கட்டத்தில் இந்த தொற்று நோயில் இருந்து விடுபட்டிருக்கக்கூடிய மாநிலம் நம்முடைய தமிழ்நாடு என்ற பெயரை நாம் எடுத்தாக வேண்டும். அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு நிச்சயமாக தேவைப்படும். அரசு நினைத்தால் அது வெற்றி பெற வைத்துவிட முடியாது. அரசோடு, பொதுமக்களாக இருக்கக்கூடிய நீங்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். ஒரு கையால் தட்டமுடியாது, இரண்டு கைகளால் தான் தட்டமுடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

ஜனவரி மாதத்துக்குள்

தமிழகத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள்தான், வீடு தேடி தடுப்பூசி திட்டத்தை முன்னெடுக்க இந்தியாவுக்கே வழிகாட்டுதலாக அமைந்தது.

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முனைப்புடன் நடந்து வருகிறது. கடந்த 10 நாட்களிலேயே தடுப்பூசி செலுத்திக்கொண்ட என்ஜினீயரிங் மாணவர்களின் எண்ணிக்கை 44.5 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. தற்போது 15 முதல் 18 வயதுள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. ஜனவரி மாதத்துக்குள் இப்பணியை முடிக்க திட்டமிட்டு உள்ளோம். ஆனால் பணிகளின் வேகத்தை பார்க்கும்போது இன்னும் 10 அல்லது 15 நாட்களிலேயே இதனை முழுமையாக நிறைவேற்றிடுவோம் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் அமைச்சர்கள் க.பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவம்-மக்கள் நல்வாழ்த்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொதுசுகாதாரம்-நோய்த்தடுப்பு மருந்து பணிகள் இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் ஆகியோர் பங்கேற்றனர்.

40 லட்சம் பேருக்கு தடுப்பூசி

நாடு முழுவதும் நடந்த சிறுவர்களுக்கான முகாமில் நேற்று ஒரே நாளில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதில் 15 முதல் 17 வயதுக்கு உட்பட்ட 37 லட்சத்து 84 ஆயிரத்து 212 சிறுவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக கோவின் செயலியில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 3 லட்சத்து 32 ஆயிரத்து 493 சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 ஆயிரத்து 427 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

Next Story