“ எனது மகனை தொட்டுப்பார்க்க கூட அனுமதிக்கவில்லையே” - சிறுவனின் தாய் உருக்கமான பேட்டி


“ எனது மகனை தொட்டுப்பார்க்க கூட அனுமதிக்கவில்லையே” - சிறுவனின் தாய் உருக்கமான பேட்டி
x
தினத்தந்தி 4 Jan 2022 3:49 AM GMT (Updated: 2022-01-04T09:19:45+05:30)

புதுக்கோட்டை அருகே தலையில் குண்டு பாய்ந்து காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார்.

புதுக்கோட்டை,

துப்பாக்கி குண்டுபாய்ந்து உயிரிழந்த சிறுவனின் தாய் பழனியம்மாள் கூறியதாவது:-

எனது மகனை காப்பாற்றி விடுவோம், காப்பாற்றி விடுவோம் என்று கூறினார்கள். அந்த நம்பிக்கையில் நாங்கள் இருந்தோம். ஆனால் கடைசியில் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது. நேற்று வரை கை, கால் அசைகிறது என்று கூறினார்கள். இப்போது ஏன் அசைய வில்லை.

எனக்கு இன்னொரு மகள் உள்ளார். அவள் அண்ணனை கொண்டு வந்து நிறுத்துங்கள் என கூறினால் நான் எங்கு செல்வேன்?. அந்த குழந்தைக்கும் ஏதாவது ஆகி விட்டால் நான் என்ன செய்வது?.

ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த அன்றே காப்பாற்ற முடியாது என கூறி இருந்தால் நாங்கள் எப்படியாவது பிச்சை எடுத்தாவது எங்காவது கொண்டு சென்று குழந்தையை காப்பாற்றி இருப்போம். அவனை காப்பாற்றி விடுவோம் என்று என்னை ஏமாற்றி விட்டனர். கடைசி நேரத்தில் எனது மகனை தொட்டு பார்க்கக்கூட என்னை அனுமதிக்கவில்லை.

எனது மகனுக்கு நேர்ந்த கதி இன்னொருவருக்கு ஏற்படக்கூடாது. துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை நிரந்தரமாக மூட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story