பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி பொதுமக்கள் பெருமிதம்


பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி பொதுமக்கள் பெருமிதம்
x
தினத்தந்தி 4 Jan 2022 9:00 PM GMT (Updated: 4 Jan 2022 9:00 PM GMT)

தலைப்பொங்கலுக்கு தாய் வீட்டு சீதனம் வழங்குவது போன்று, பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று சென்னையில் பெண்கள் கூறி பெருமிதம் அடைந்தனர்.

சென்னை,

தமிழகத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவை மஞ்சள் பையில் வைத்து, முழு கரும்பு ஒன்றும் சேர்த்து பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைத்து ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகத்தை தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் தினமும் தலா 150 குடும்பங்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்க அரசு உத்தரவிட்டதின் அடிப்படையில் பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கப்பட்டன.

தாய் வீட்டு சீதனம்

சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த கமலா, அடையாறு கோலம்மாள், புரசைவாக்கம் வசந்தா, அண்ணாநகர் ஆனந்தி உள்ளிட்ட பல இல்லத்தரசிகள் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக தாய் வீட்டில் இருந்து தலைப்பொங்கலுக்கு வரும் சீதனம் போன்று, தமிழக அரசு எங்களை போன்றவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கியதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். 21 வகை பொருட்களுடன் இந்த ஆண்டு முழு கரும்பு அளித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது.

கடந்த காலங்களில் ஒரு துண்டு கரும்பு வழங்குவார்கள். அதை வீட்டுக்கு போவதற்கு முன்பாகவே குழந்தைகள் காலி செய்துவிடுவார்கள். பொங்கலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். தமிழக அரசுக்கும், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் என்று கூறி பெருமிதம் அடைந்தனர்.

150 பேருக்கு வினியோகம்

இதுகுறித்து ரேஷன் கடைக்காரர்கள் கூறியதாவது:-

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றி வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளதால், காலையில் 100 பேருக்கும், மாலையில் 50 பேருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கி வருகிறோம்.

கடைகளிலேயே பொருட்களை பைகளில் போட்டு தர கூறுகிறார்கள். இதற்கு அதிக நேரம் செலவிட வேண்டி உள்ளது. ஏற்கனவே பைகளில் அடைத்து தந்து இருந்தால் உடனுக்குடன் வழங்கி பணியை எளிதாக்கி இருக்க முடியும். காலதாமதமானாலும் பொதுமக்கள் அமைதியாக நின்று வாங்கி செல்கின்றனர். அரசுக்கும் நன்றி தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு ரேஷன் கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

Next Story