ரெயில் நிலைய கொள்ளை சம்பவம்; குப்பையில் பதுக்கிய ரூ.1.32 லட்சம்


ரெயில் நிலைய கொள்ளை சம்பவம்; குப்பையில் பதுக்கிய ரூ.1.32 லட்சம்
x
தினத்தந்தி 4 Jan 2022 9:33 PM GMT (Updated: 4 Jan 2022 9:33 PM GMT)

சென்னை திருவான்மியூர் ரெயில் நிலைய கொள்ளை சம்பவத்தில் கிடைத்த ரூ.1.32 லட்சம் தொகையை குப்பையில் பதுக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


சென்னை,

சென்னை திருவான்மியூர் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் ஊழியரிடம் துப்பாக்கி முனையில் ரூ.1.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.  இந்த சம்பவத்தில் ரெயில்வே போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் அந்த ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர் ஊழியரே மனைவியுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

டீக்காராம் மீனா (வயது 28) என்ற அந்த ஊழியரின் மனைவி சரஸ்வதி டிக்கெட் கவுண்ட்டரில் இருந்து கொள்ளையடித்து கொண்டு வந்த ரூ.1.32 லட்சம் பணம், கணவரின் செல்போன் ஆகியவற்றை ஒரு பையில் போட்டு, வீட்டிற்கு வந்ததும் வீட்டு வளாகத்தில் உள்ள கிணற்றுக்கு பக்கத்தில் தேக்கி வைத்திருந்த குப்பையோடு குப்பையாக சேர்ந்து மறைத்து வைத்துள்ளார்.

இதன்பின்னர் செலவுக்கு அதில் இருந்து ரூ.20 ஆயிரம் மட்டும் எடுத்து, பீரோவில் வைத்துவிட்டு, காலையில் பணி முடிந்து கணவன் வந்ததும் மீதி பார்த்துக்கொள்ளலாம் என தூங்க சென்று விட்டார்.

இந்தநிலையில், போலீசார் துப்பு துலக்கி சரஸ்வதி வீட்டிற்கே சென்று, கிடுக்குப்பிடியாக விசாரித்ததால், குட்டு வெளிப்பட்டு கொள்ளையடித்த பணம் மொத்தத்தையும், போலீசிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்துவிட்டார்.


Next Story