‘அம்மா மினி கிளினிக்குகளால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை’ அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


‘அம்மா மினி கிளினிக்குகளால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை’ அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 4 Jan 2022 10:59 PM GMT (Updated: 4 Jan 2022 10:59 PM GMT)

அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாக தொடங்கப்பட்டதுதான். இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் நேற்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முன்னிலையில் திறந்து வைத்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. சென்னையிலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் நிலை உள்ளது. சென்னையில் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 7 மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

100 இடங்களில்...

2-வது அலையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பில் 79 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த மையங்களில் 28 ஆயிரத்து 808 பேர் சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளனர். தற்போது மீண்டும் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் மாநிலத்திலேயே முதல் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் பெரியார் திடலில் 41 படுக்கை வசதிகளுடன் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும்.

ஒமைக்ரான் தொற்று பாதித் தவர்கள் வீடுகளிலேயே தனிமைப் படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று கொள்ளலாம். குறிப்பாக 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு லேசான அறிகுறிகளுடன் உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம்.

தடுப்பூசி செலுத்துவோர் அதிகரிப்பு

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை தொற்று பாதித் தவர்களுக்கு முதற்கட்ட பரிசோதனை செய்ய ஏதுவாக 22 இடங்களில் முதற்கட்ட பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 16 மையங்கள் இன்று (நேற்று) முதல் செயல்பட தொடங்கி விட்டன. மேலும், ஒவ்வொரு மண்டலத்திலும் டாக்டரை கொண்ட குழு அமைக்கப்பட்டு தொலைபேசி வாயிலாக தொற்று பாதித்தவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறியப்பட்டு அவர்களுக்கு தகுந்த ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படும்.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவோர் சதவீதம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த 27 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

அம்மா கிளினிக்

கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக் ஒரு வருட காலத்துக்கு தற்காலிகமாக மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. தொடங்கும் போது 1,800 டாக்டர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டனர். நர்சுகள் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்த திட்டத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம் முடிந்துவிட்டது. எனினும் அம்மா மினி கிளினிக் பணிகளுக்கு நியமிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு மார்ச் மாதம் வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கொரோனா பணிகளில் பயன்படுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பரந்தாமன் எம்.எல்.ஏ., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமி ஷனர் ககன்தீப் சிங் பேடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story